Friday, March 11, 2016

தினம் ஒரு பாசுரம் - 71

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கு என்று,

எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்,

மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே,

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?


---திருவாய்மொழி (நம்மாழ்வார்)

இன்று திருவேங்கட த்ரிவிக்ரமப் பாசுரம் ஒன்று. பொருட்சுவையில் அலாதியான ஒன்றும் கூட



பொழிப்புரை:

எந்நாளே நாம் - எப்போது நாம்

மண்ணளந்த - இந்த பூவுலகை, ( அந்த விண்ணுலகையும் தாவி ) அளந்த

இணைத்தாமரைகள் - (திருமாலின்) இரு திருவடிகளையும்

காண்பதற்கு என்று - காண்பதற்குரிய நாள் (எப்போது  அமையும்) என

எந்நாளும் நின்று - ஒரு நாளும் விடாமல், நின்ற வண்ணம்

இனம் இனமாய் - பெருங்கூட்டமாய்

இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி - வானவர்கள் துதி செய்து, பரம பக்தியுடன் தொழுது

மெய்ந் நா மனத்தால் -  உடல், நா, உள்ளம் என்ற மூன்றையும் கொண்டு

வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே - ஆராதிக்கும் திருமலையில் எழுந்தருளியுள்ள கோவிந்தனே

மெய்ந் நான் எய்தி   - மெய் நிலையை நான் அடைந்து

எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? -  உன் திருவடிக் கீழ் அடியவனான நான் சேர்ந்து அமையும் நாள் என்றைக்கோ?

பாசுரக்குறிப்புகள்:

திருவாய்மொழிப் பாசுரங்கள் அந்தாதி வகையைச் சேர்ந்தவை. அதாவது, ஒரு பாசுரத்தின் கடைச்சொல் கொண்டு அடுத்த பாசுரம் தொடங்கும். அந்த வகையில், இப்பாசுரத்திற்கு முந்தையதில் ஆழ்வார் "திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?" (தினம் ஒரு பாசுரம்-68 இடுகை) என்று உய்வடையும் நாள் பற்றிய ஐயத்தை எழுப்பியிருந்தார். இப்பாசுரத்திலும், "எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?"  என்று சந்தேகப்படினும் "மெய்ந் நான் எய்தி" என்று பரமபதத்திற்குத் தேவையான  தகுதியைத் தான் பெற அருளவேணுமாய் வேண்டிய பின்னரே திருவடி நிழல் தஞ்சம் புகுவது பற்றிச் சொல்கிறார், இல்லையா?

 


 மண்ணளந்த இணைத்தாமரைகள்

ஆழ்வார்கள்  வாமன அவதாரத்தை  மிக்க ஏற்றமாய் பாசுரங்களில் பாடியதற்கு, அதன் திருவடி உகந்த சம்பந்தமே காரணம் எனலாம்.  ராமானுஜரும் தனது "சரணாகதி கத்யத்தில்" "லோகவிக்ராந்த சரணௌ சரணம்தே வ்ரஜம் விபோ (உலகமளந்த உன் திருவடிகளை உபாயமெனப் பற்றுவேன்)" என்ற  வடமொழிப் புராண தோத்திரத்தைச் சுட்டி  த்ரிவிக்ரமனின் திருவடிகளையே முன்னிறுத்துகிறார். இன்னும் பல எடுத்துக்காட்டுகள் தரலாம்.

நம்மாழ்வாரின் திருவாய் மொழி -
"குறள் ஆய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன"

"திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே"

"மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு, நீலக் கரு நிற மேக நியாயற்கு, கோலச் செந்தாமரைக் கண்ணற்கு "

"மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே"

"ஓரடியால் எல்லா உலகும் தட வந்த மாயோன்"

"ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே"

"தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ"

"ஞாலத்தூடே நடந்து உழக்கி தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை" (கள்ளழகர்  மங்களாசாசனம்)

ஆண்டாளின் திருப்பாவை -
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி"

"அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே"

"அன்று  இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி"

திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தம் -
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே

திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழி -
மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஏன் தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்

மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது  நம்மையாளும் அரசே

திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல்
"ஆரால் இவ்வையம் அடி அளப்புண்டது தான்"

"பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை" 


 
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்- திருவேங்கடமுடையானின்  திருவடிகள் தேவர்களுக்கும் அரிதான செங்கமலத் திருவடிகள் என்று ஆழ்வார் அருளுகிறார். வானவர்களே, நிரந்தரமாக, திரள் திரளாக, அவனது திருவடிகளை தரிசிப்பதற்காக, பணிவன்புடன்  நின்று  தொழுகின்றனர் எனும்போது, மானுடர்க்கு வேறு புகழ் இல்லை என ஆழ்வார் நமக்கு உணர்த்துகிறார். இன்னொரு விதமாகவும் இதைப் பார்க்கலாம்.   அதாவது, மானுட அடியார்களுக்கு (அர்ச்சாவதார) திருமலை உறை அண்ணலின் திருவடிகள், வானுலக மாந்தர் வணங்கும் பரமபத நாயகனின் திருவடித் தாமரைகளுக்கு ஒப்பானவை!

மெய்ந் நா மனத்தால் வழிபாடு - மனம், வாக்கு, காயம் என்று த்ரிகரணங்களாலும் வழிபடுதல் வேண்டும் என்பது ஆழ்வார் வாக்கு. அதுவே சரணாகதித்துவக் கோட்பாடு.  ஆழ்வார் "எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி" எனப் பாடி  இம்மூன்றுக்கும் பொருத்தமாக  3 வினைகளை (முறையே) அருமையாகக் கையாள்கிறார்.
மெய் --- நின்று
நா --- ஏத்தி
மனத்தால் --- இறைஞ்சி


அதனால் தான் "மனம் வாக்கு காயம்" பாசுரத்தில் "காயம் வாக்கு மனம்" என மாறி வருகிறது.  மெய் என்பது   உடலின் செயல்களைக் குறிக்கிறது: பணிதல், நோன்பிருத்தல் போன்றவை.   காயம் (உடல்) முதலில் வசப்பட வேண்டும் (ஐம்புலனடக்கம்) என்பதால் மெய் முதலில் சொல்லப்பட்டது என்று கொள்வதும் தகும். "மெய்யான  நம்பிக்கையுடன், பற்றுதலுடன், நாவினாலும், மனத்தினாலும் வழிபாடு செய்தல் வேண்டும்" என்றும் கொள்ளலாம்.

ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம் ஒன்றில் "தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" என்று  இம்மூன்றையும் நம்மாழ்வார் சொன்ன வரிசையிலேயே தான் பாடியிருக்கிறாள்.

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? - ஆழ்வார் " பரமனே! அடியேன் உண்மையைக் கண்டு கொண்டேன் . (ஆனால்)அதை முழுமையாக புரிந்து தெளியவல்ல அறிவை நீவிர் அருளி ஆட்கொள்ள வேண்டும்" என்று தன்னைக்  குறைத்து எண்ணிக் கொள்ளும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்!?

பொதுவாக  "மெய்" அல்லது "உண்மை" என்பதற்கு "பரந்தாமனே உபேயம் (இலக்கு), அவனே உபாயம் (அடையும் வழிவகை)" என்று பொருள்படும்.  "மெய்ந் நா மனத்தால்", "மெய்ந் நான் எய்தி" என்று ஆழ்வாரின் சொற்சித்தும் ரசிக்கத் தக்கது :-)

மேவுதல் - அழகான இச்சொல்லை பல பாசுரங்களில் காணலாம். இது 'வெறும் தங்குதல்' இல்லை, (திருவடியில்)"பொருந்தி அமைதல்". இது தவிர இச்சொல்லுக்கு "அடைதல்; விரும்புதல்; நேசித்தல்; உண்ணுதல்; ஓதுதல்; நிரவிச்சமனாக்குதல்; மேலிட்டுக்கொள்ளுதல்; வேய்தல்; அமர்தல்;" என்று பல பொருள்கள் உண்டு.

ஆக, அர்ச்சாவதார கோல திருவேங்கடப் பெருமாளின்  திருவடிகளில் சரண்  அடைவது, அன்று உலகளந்த   திருவடிகளில் சரண் புகுவதற்கு ஈடானது என்பது ஆழ்வார் திருவாக்கு.  அதாவது, திருமலை ஸ்ரீனிவாசனின் திருவடித் தாமரைகள் அத்தகைய சௌலப்யமும் (எளிமை வாய்ந்த கருணை) சௌசீல்யமும் (பேதம் நோக்காத கருணை) மிக்கவை.

திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

---எ.அ. பாலா 

Tuesday, March 08, 2016

தினம் ஒரு பாசுரம் - 70

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலமெல்லாம்

சீறா எறியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே!

சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!

ஆறா அன்பில் அடியேன்  உன் அடி சேர் வண்ணம் அருளாயே.


--- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

பாசுரப் பொருள்:

கொடு வல் அசுரர் குலமெல்லாம் - கொடிய, வலிமை மிக்க அரக்கர்களின் கூட்டங்கள் அனைத்தும்

கூறாய் நீறாய் - பல துண்டுகளாயும், பின் சாம்பலாயும்

நிலனாகிக்  - பின் மண்ணில் (தேய்ந்து அழிந்து) போகும்படிச்  செய்கின்ற 

சீறா எறியும் - சீறி(யும்) அடங்காது பாய்கின்ற

திருநேமி வலவா - திருச்சக்கரத்தை வளைக்கையில் தரித்தவனே

தெய்வக் கோமானே! - கடவுளர்க்கெல்லாம் தலைவனே

சேறார் சுனைத் தாமரை - சேறு நிறைந்த குளங்களில் தாமரை மலர்கள்

செந்தீ மலரும் - நெருப்பைப் போல சிவப்பாகப் பூக்கின்ற

திருவேங்கடத்தானே! - திருமலையில் வாசம் செய்தருளும் எம்பெருமானே

ஆறா அன்பில் அடியேன்  -  (உன் மீது) மாறாத/குறையாத, அளவில்லாத  அன்புடைய அடியவனான நான்

உன் அடி சேர் - உன் திருவடியை வந்து அடைவதற்கு

வண்ணம் அருளாயே - வழி காட்டி அருள் செய்ய வேணும்

பாசுரக்குறிப்புகள்:

திருமாலின் காத்தருளும், கருணை குணத்தைப் போற்றிப் பாடும் ஆழ்வார், அவனது (பகைவரை) அழிக்கும் தன்மையின் தீவிரத்தை சற்று உக்கிரமாகவேச் சொல்கிறார். இப்படியும் சிலபல உக்கிரப் பாசுரங்கள் உண்டு.

இராமாயண  போர்க்களத்தை ஆழ்வார் விவரிப்பதைப் பார்த்தால் சற்று அச்சம் ஏற்படும்!
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலை போல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே!


திருச்சக்கரத்தை ஒரு நவீன கால ஏவுகணைக்கு ஒப்பாகச் சொல்கிறார் ஆழ்வார். பரமனின் ஆழியானது, பகைவரை வெட்டிச் சாம்பலாக்கி மண்ணோடு மண்ணாக்கி விடும். சில நேரங்களில் காக்கும் தொழிலைச்  செய்ய அழிக்கவும் வேண்டியிருக்கிறதல்லவா? செங்கோல் ஆட்சி புரிய திருச்சக்கரம் தேவையே .... என்று நம் ஆழ்வாரே திருவிருத்தத்தில்  திருவாய் மலர்ந்திருக்கிறார்.
"அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்"


பிறிதொரு பாசுரத்தில்
"கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!  கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்!" 
என்று கடல் சூழ்ந்த உலகங்களை காத்து ஆள்வதில் மின்னும் திருச்சக்கரத்தின் பங்கை ஆழ்வார் எடுத்துரைக்கிறார்.

பெரிய திருவந்தாதியில்
"கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்"
என்று ஆழ்வார் அருள்கையில் சக்கரமானது பரமனின் வலக்கையை விட்டு அகல்வதே இல்லை என்று அர்த்தமாகிறது.

இங்கு திருச்சக்கரத்தை நம் தீவினைகளை வேரறுக்கும் தன்மைக்குக் குறியீடாகவும் கொள்ளலாம், அதற்கும் ஆழ்வார் பாசுரமே சான்று :-)
"எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்"

"சீறா எறியும்" - பகையை வேரோடு அழிக்கும் திருச்சக்கரமானது, ஓர் அழித்தலுக்குப்  பின்னும், வன்மை சற்றும் குறையாமல், ஒளிர்ந்து கொண்டு அடுத்த ஏவுதலுக்குத் தயாராக இருக்கிறதாம்! அதுவே "சீறா எறியும்".
"திரு நேமி வலவா" - வலவன் = "வலக்கையில் உடையவன்", "திறமையாளன்".
"வல்லவன்" என்பது மருவி "வலவன்" ஆகியதாகக் கொண்டால் "அழிக்கும் தன்மை மிகுந்திருக்கும் திருவாழியை அடக்கியாள வல்லவனே" என்று ஆழ்வார் புகழ்வதாகக் கொள்ளலாம்.


"தெய்வக்கோமானே" --- சுவாமித்துவத்தின் வெளிப்பாடு. பெரும்பாலான திருவேங்கடமுடையான் பாசுரங்களில் சுவாமித்துவத்தை ஆழ்வார் போற்றியிருப்பதை நோக்குகையில், கலியுக அர்ச்சாவதார வழிபாட்டுக்கு மிக உகந்தவன் திருமலையில் வாசம் புரியும் பெருமாளே என்பதை ஆழ்வார் வாக்காகவே கொள்ளலாம்.

"சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்  உன் அடி சேர் வண்ணம் அருளாயே"


"சேறார் சுனைத் தாமரை" க்கும் "ஆறா அன்பில் அடியேன்"  என்பதற்கும் ஒரு நயமான தொடர்பை உருவாக்கலாம்.  "திருவேங்கடப் பெருமாளே! திருமலையில் உள்ள குளங்களில் நீர் வற்றலாம். ஆனால், உன் மீது எனக்குள்ள பேரன்பானது, என்றும் வற்றாது, மாறாக பெருகிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது. ஆகவே, என் சரணாகதியை ஏற்று உன் கமலத் திருவடி நிழலில் சேர்த்து, தொண்டு செய்ய அருள் புரிய வேணும்"  என்று ஆழ்வார் இறைஞ்சுவதாகக் கொள்வதிலும் ஒரு சுவை இருக்கிறது தானே!

--- எ.அ. பாலா

Monday, March 07, 2016

தினம் ஒரு பாசுரம் - 69

தினம் ஒரு பாசுரம் - 69


அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே,

கொடியா அடு புள் உடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே,

செடியார் வினைகள் தீர்மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே,

நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே


-- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

திருவேங்கடவன் திருவடிப் பற்றல் பாசுரங்கள் தொடர்கின்றன.

பொருளுரை:


அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியவனான நான் அணுகி அனுபவிக்கும் அமுதமே

இமையோர் அதிபதியே - வானவர் தலைவனே

கொடியா அடு புள் உடையானே - உன் திருக்கொடியாக (பகையை) அழிக்கும்/பொசுக்கும் கருடனைக் கொண்டவனே 

கோலக் கனிவாய்ப் பெருமானே- அழகிய கனி நிகர் அதரம் உடையவனே 

செடியார் வினைகள் தீர்மருந்தே -  செடி போல (அடர்ந்து வளரும்) பாவங்களை ஒழிக்கும் மருந்தானவனே

திருவேங்கடத்து எம்பெருமானே - திருமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணலே

உன் பாதம் காண - உன் திருவடியைக் காண்பதற்காக

நொடியார் பொழுதும் - ஒவ்வொரு  நொடிப்பொழுதும்

நோலாது ஆற்றேனே - நோன்பு எதுவும் மேற்கொள்ளாத நான், பொறுக்க மாட்டாது தவிக்கிறேனே

பாசுரக்குறிப்புகள்:



அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - முன் எழுதிய பாசுர இடுகைகளில் ஆழ்வார் அருளிய "சென்று சேர், அமர்ந்து புகுந்தேனே" போன்றதே தான் "மேவி அமர்கின்ற" என்பதும். "மேவுதல்" என்பதற்கு  நேர்ப்பொருள் "தங்குதல்". உள்ளர்த்தமாக  மெய் ஒழுக்கம் சார்ந்த  நன்னெறி / புலனடக்கம் எனலாம். அதைக் கைக்கொண்ட பின்னரே "அமர்தல்" என்ற உள்ளம் (ஆன்மா) சார்ந்த அடிப்பற்றுதல் (சரணாகதித்துவம்).

அமுதம் சாகா வரம் தரும் மருந்து. பெருமாளை அமுதம் என்கையில், அவனைப் பிறப்பறுக்கும் "மருந்தாக", பரமபதத்தை/பேரின்பத்தை அருளுபவன் என்று கொள்வது சரியானதே. இதன் வாயிலாக ஆழ்வார் பரமனின் வாத்சல்ய (பேரன்பு) குணத்தைப் போற்றுவதாகச் சொல்லலாம்.

இமையோர் அதிபதியே - அமுதம் என்றழைத்தவுடன்,  தேவர்கள் நம் ஆழ்வார் மனத்து வர,  "இமையோர் அதிபதியே" என்று திருமாலின் சுவாமித்துவ (இறைத்தலைமை) குணத்தைப் போற்றுகிறார். மேலும், திருநாடான வைகுந்தத்தில் இமையவருக்குக் கிட்டும் இறை அனுபவத்துக்கு ஈடான ஒன்றை  தான் பூவுலக வாழ்விலேயே அனுபவிப்பதை ஆழ்வார் குறிப்பதாகக் கொள்வது ஒரு நயம் சார் கருத்தே.

கொடியா அடு புள் உடையானே - 
"அடு புள்" = (பகையை) அழிக்கும் பறவை (கருடன்)
இதை, ஐம்புலன்கள் சார் சிற்றின்ப ஆசைகளை பொசுக்கும் வல்லமைக்குக் குறியீடாகக் கொள்ளலாம். அத்தகைய வல்லமையுடைய "பெரிய திருவடி" ஆகிய கருடனை எம்பெருமான் ஆனவன் தனது திருக்கொடியாக வைத்திருப்பவன்.

 மற்றொரு பாசுரத்தில் "உள் நிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்" என்று தானே ஐம்புலன்களால் பெரும் அவதியுறுவதாக (ஆழ்வார்களில் தலையாய) நம்மாழ்வாரே அருளியிருக்கையில், பொருளாசையே பிரதானமாக இருக்கிற தற்காலச்சூழலில், நாமெல்லாம் எம்மாத்திரம்?!

அதோடு, அக்கருடன் மீதேறி விரைந்து சென்றுத் தானே "ஆதிமூலமே" என்று அலறிய யானைக்கு வரதன் அபயம் அளித்தான்.  ஆக, பரந்தாமனின் "சௌசீல்யம்" (உயர்வு/தாழ்வு பாராமல் காத்தருளும் குணம்) இங்கு வெளிப்பட்டது!

கோலக் கனிவாய்ப் பெருமானே - பல பாசுரங்களில் ஆழ்வார், திருமாலின் திருவாயை தாமரை மலருக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார், அதன் மென்மைக்காகவும், சிவந்த நிறத்திற்காகவும். இங்கு கனியுடன் அதரங்களை ஒப்பிடுவது, பரமனது இனிய, குழைந்த புன்முறுவலை எடுத்துக் காட்டவே. புன்னகையுடன் கூடிய, எளிமைத்தன்மையுடன் அடியவர்க்கு மனம் இரங்கும் கல்யாண குணமான "சௌலப்யத்தை"க் குறிப்பதாகச் சொல்லலாம் தானே!

கண்ணபிரானாக, பாஞ்சாலி, குசேலன், குந்தி, பீஷ்மர், கர்ணன் என்று பலருக்கு சௌலப்யம் காட்டியிருக்கிறான்.  ஆக, முதல் 2 வரிகளில்  பரந்தாமனது 4 முக்கியமான கல்யாண குணங்களையும் ஆழ்வார் உணர்த்தி விடுகிறார்.

செடியார் வினைகள் தீர்மருந்தே - செடி போல அடர்ந்து படர்ந்து வளரும், துன்பம் தரும் வினைகளை ஒழிக்கும் பெரு மருந்து, அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள, திருமலை உறை நாதனே என ஆழ்வார் அறுதியிட்டு அருளுகிறார். பாவங்கள் ஒழிந்தால் தானே பரமபதம் கை கூடும்! (திருமழிசைப்பிரானின் "விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே"  என்ற முன் எழுதிய இடுகையின் பாசுர வரிகளை நினைவு கூர்க)

நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே -  "இப்படி கல்யாண குணங்களைக் காட்டியும், தீவினையைப் போக்க வல்ல மருந்தாகவும் விளங்கும் எம்பிரான் உன் திருவடியைக் காண வேண்டி, நோன்பு எதுவும் மேற்கொள்ளாத அடியேன் ஒவ்வொரு நொடியும் கிடந்து துடிக்கிறேன்" என்று மருகுகிறார் ஆழ்வார்.  இதை வேறு விதமாகவும் நோக்கலாம்: "நான் ஒரு நொடிப் பொழுதும் நோன்பிருக்காமலேயே உன்னைக் காண ஏங்கித் தவிக்கிறேன்".

எப்படி பொருள் கொண்டாலும், இதன் சாரம் ஒன்று தான். நோன்பு இருந்து, பூசைகள் செய்து வாழும் அடியார்களின் ஆற்றாமைக்கு சற்றும் குறைந்ததல்ல தனது ஆற்றாமை என்று ஆழ்வார் குறிப்பில் உணர்த்துகிறார். இதில் நம்பிக்கை தரும் அருட்செய்தியும் உள்ளது. "ஞான அனுட்டானங்கள் முக்கியமில்லை. அவனை அடைய பரமபக்தி ஒன்றே போதும். அம்மாயவனைக் கட்டி இழுக்க, பக்தி யோகமானது ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது" என்பதை ஆழ்வார் வாக்காக நாம் கொள்வோம்.

திருவேங்கடவன் திருவடிகளே சரணம்!

---எ.அ. பாலா

Friday, March 04, 2016

தினம் ஒரு பாசுரம் - 68

தினம் ஒரு பாசுரம் - 68


புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,
திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?


(திருவாய்மொழி - 6.10.5) - நம்மாழ்வார்

இன்று ஒரு ராம-கிருஷ்ண பாசுரம். ஆழ்வார் திருவேங்கடமுடையானை ராமனாகவும், கண்ணனாகவும் பாவித்து, அனுபவித்து எழுதிய ஓர் அற்புதமான திருப்பாசுரம். ஸ்ரீராமனாகவும், கோகுல கிருஷ்ணனாகவும் பூவுலகில் அவதாரம் செய்த திருமால் தான், கலியுகத்தில் அர்ச்சாவதார கோலத்தில் திருமலை ஸ்ரீநிவாசனாக அருள் பாலிக்கிறான் என்பது ஆழ்வார் தரும் அருட்செய்தியாம்.

மூல வேங்கடவன் திருத்தோள்களில் அம்புறாத் தூணி கட்டிய  அடையாளமும், நாணேற்றிய தோள் தழும்பும் இருக்கின்றன.  அவன்  திருவயிற்றுப் பகுதியில்  உரலில் கட்டப்பட்ட  தாம்புக் கயிற்றுத் தழும்புகளைக் (அதனால் தான் அவன் தாமோதரன் = தாமம் + உதரன்) காணலாம். ஆக, திருமலை உறை  எம்பெருமானே சீதாவின் ராமன், அவனே யசோதாவின் கிருஷ்ணன்!

பொருளுரை:


புணரா நின்ற மரம் ஏழ் -  தனித்தனியாக (ஒரு நேர்க்கோட்டில்)  நின்ற ஏழு மரங்களை  (துளைத்துச்செல்லும் வண்ணம்)
அன்று  - அன்றொரு காலத்தில் (இராமாவதாரத்தில்)
எய்த ஒரு வில் வலவாவோ - அம்பெய்த திறமையான வில்லாளனே !
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் - பிணைந்து  (இரட்டை மருத மரமாக) நின்ற இரு மரங்களுக்கு
நடுவே போன முதல்வாவோ - இடையே (உரலை  இழுத்தபடி நடந்து) சென்ற ஆதி முதல் நாயகனே !
திணர் ஆர் மேகம் எனக் - (நீருண்ட) கனம் மிக்க மேகங்களை ஒத்த 
களிறு சேரும் திருவேங்கடத்தானே - (கருமையான) யானைகள் சேர்ந்து திரியும் திருமலையில்  எழுந்தருளிய அண்ணலே !
திணர் ஆர் சார்ங்கத்து - வலிமை மிக்க ஸ்ரீசார்ங்கம் எனும் வில்லைத் தாங்கிய (எம்பிரானான)
உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே? - உனது திருவடிகளை அடியேன் அணுகிப் பற்றுவது என்றைக்கோ?

 

பாசுரக்குறிப்புகள்:


புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,


 இராமனின் விற்திறமை, வாலியை வெல்வதற்குரிய வலிமை ஆகியவை பற்றிய சுக்கிரீவனின் ஐயத்தைப் போக்க, அந்த ராகவன் ஒரே அம்பை எய்து ஏழு மராமரங்களைத் துளைத்துச் செல்லும்படி செய்து காட்டிய நிகழ்வை ஆழ்வார் எடுத்தாள்வதில் ஒரு சூட்சமம் உள்ளது :-) "சுக்கிரீவன் ஆனவன் உனது குணபெருமைகளை, ஆற்றலை அறியாதவனாய் உன் மேலேயே  சந்தேகம் கொண்டான்.  அதைப் பெரிதாக எண்ணாமல் அந்த சந்தேகத்தையும் தீர்த்து வைத்த, பெருந்தன்மையும், எளிமையும் மிக்கவன் நீ.   உன் பரம அடியவன் ஆன நானோ, துளிச் சந்தேகமும் இன்றி , நீ மட்டுமே கதி என்று நம்பி வந்தவன். எனக்கு மனம் இரங்கலாகாதா?" என்று நம் ஆழ்வார் உள்ளர்த்தமாகச் சொல்வதாகக் கொள்வதில் தான் எத்தனை சுவை !!!

 







புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,

அடுத்து ஆழ்வார் கிருஷ்ண அவதார நிகழ்வைச் சுட்டுகிறார். யசோதாவின் சின்னக்கண்ணன் இரட்டை மரங்களுக்கு  இடையே உரலுடன் ஓடி
("பணமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்,
இணைமருதிற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே
"
என்ற திருமங்கை மன்னனின் பாசுர வரிகளை நினைவு கூர்க!)
அவை பெயர்ந்து விழுந்ததால், அதுவரை மரங்களாக இருந்த, நாரதரால் சபிக்கப்பட்ட குபேரனின் புதல்வர்கள் சாப விமோசனம் பெற்றனர். அதாவது, எப்படி, எப்போது ஒருவரின் தீவினையை, சாபத்தைப் போக்கி ரட்சிக்க வேண்டும் என்று அந்த மாயனுக்குத் தெரியும் என்பதை ஆழ்வார் குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்வது தகும்.

முதல்வா - பரந்தாமனே "ஊழி முதல்வன், தனியொரு வித்து, பரம்பொருள், முத்திக்கும் வித்து" என்று உணர்க.

திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,

இங்கு திருமங்கை மன்னன் திருநெடுந்தாண்டகத்தில், திருமூழிக்களத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்த பாசுர வரிகளைப் பார்ப்போம்.
தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலதாயினாய் இமையோர்க்கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலானாயே.

திருமாலே களிறு போன்றவன் என்கிறார் திருமங்கை ஆழ்வார். தென் திருமாலிருஞ்சோலை மலையிலும், வட வேங்கடத்திலும்,  குட(மேற்கில்)  திருவரங்கத்திலும், குண(கிழக்கில்) திருக்கண்ணபுரத்திலும் என்று நான்கு திசைத் திருத்தலங்களிலும்  நின்றும், கிடந்தும் அருள் பாலிப்பவனை நான்கு (வலிமை, பெருமை மிகு) யானைகளாக ஆழ்வார்  பார்க்கிறார்.

திணரார் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?

ஆழ்வார் உணர்த்துவது: "உன் கையில் சார்ங்கத்தைக் கண்டவுடன் எனக்கு பரமபதம் கிட்டுவது குறித்த பயம் முழுதும் விலகி விட்டது. அதற்கான தடைகளை நீ உடைத்தெறிவாய் என்ற நம்பிக்கையும் மிகுந்து இருக்கிறது.  ஆனால், அது கை கூடி வரும் நாளைச் சொல்லல் ஆகாதா?"  ---- இப்படிக் கொள்வதில் சுவை இருக்கிறது தானே!

"புணர்" என்பதற்கு "சேர்" என்பதோடு  "புதுமை, சமீபம்" என்ற பொருள்களும் உண்டு.
காதலித்தவளைக் கூட நேராமையால் தலைவன் தனித்துறைந்து வருந்துதலைக் கூறும் புறத்துறைக்கு   "புணராவிரக்கம்" என்று பெயர்.

வலவன் = திறமையுடையவன்; வெற்றியாளன்; தேர்ப்பாகன்; திருமால்; வலப்பக்கத்து உள்ளவன்; ஓர் அசுரன்

"திணர்" என்பதற்கு செறிவு, மிகுதி. நெருக்கம், அடர்த்தி, வலிமை; உறுதி,  பருமன், கனம்  என்று பல பொருள்கள்.

"ஆர்" என்ற இரண்டெழுத்துச் சொல்லுக்கு இத்தனை பொருள்கள் உள்ளன. நம் தமிழ் தான் எத்தனை பெருமைக்குரியது!
நிறைவு; பூமி; கூர்மை; அழகு; மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி; ஆரக்கால்; தேரின் அகத்தில் செறிகதிர்;அச்சுமரம்; செவ்வாய்; சரக்கொன்றை; அண்மை; ஏவல்; பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப் பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.

---எ.அ.பாலா

Thursday, March 03, 2016

தினம் ஒரு பாசுரம் - 67

தினம் ஒரு பாசுரம் - 67

உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !
குலதொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே.


(திருவாய்மொழி - 6.10.1) - நம்மாழ்வார் 


முந்தைய பாசுர இடுகை "செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே" எழுதிய கையோடு, திருமலைக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு (எதிர்பாராமல்) கிடைத்தது.  தெரிந்த ஒருவர் வாயிலாக ஸ்பெஷல் தரிசனம் :-) நன்றி தெரிவித்து, இன்று இன்னுமொரு திருவேங்கடமுடையான் அடிப்பற்றல் பாசுரம்!








பாசுரப்பொருள்:

உலகம் உண்ட பெருவாயா ! - (பிரளய காலத்தில்) பூவுலகை விழுங்கி (திருவயிற்றில் வைத்துக்) காத்த அகண்ட வாயனே
உலப்பில் கீர்த்தி அம்மானே ! - நிகரில்லாத புகழ்/பெருமை வாய்ந்த இறையவனே 
நிலவும் சுடர் சூழ் - மாறாத/மங்காத பிரகாசம் கொண்ட
ஒளிமூர்த்தி ! -  சோதி வடிவானவனே
நெடியாய் ! - (வடிவத்திலும், குணபெருமைகளிலும்) உயர்ந்து நிற்பவனே
அடியேன் ஆருயிரே ! - என் உயிருக்கு ஒப்பானவனே
திலதம் உலகுக்காய் நின்ற - உலகுக்கு ஒரு திலகம் போல வாய்த்திருக்கும்
திருவேங்கடத்து எம்பெருமானே ! - திருவேங்கடமலையில் நின்று அருளும் அண்ணலே
குலதொல் அடியேன்- பல தலைமுறைகளாக உனக்குத் தொண்டு செய்யும் குலத்தில் பிறந்த நான்
 உன பாதம் கூடும் - உனது திருவடிகளை வந்தடையும்
ஆறு கூறாயே - வழிவகையை உரைப்பாயாக

பாசுரக்குறிப்புகள்:

உலகம் உண்ட பெருவாயா - பிரளயத்தின்போது பூவுலகை திருமால் விழுங்கி தன்  பொன் வயிற்றில் வைத்துக் காத்த நிகழ்வை ஆழ்வார் சுட்டியதில் சாரம் இருக்கிறது.  நல்லவர், தீயவர், அறிவில் சிறந்தவர்/ குறைந்தவர், செல்வந்தர், ஏழை, இன்னும் பலப்பல உயிரினங்கள் என்று அனைவரின் /அனைத்தின் மீதும் கருணை கொண்டு ரட்சித்த பரமன் ஆனவன், அடியார்களை  ஒருபோதும் கை விட மாட்டான்  என்ற  நம்பிக்கை தரும் செய்தியை , பூவுலகை உண்ட நிகழ்வைச் சுட்டி,  ஆழ்வார்   குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்வது பொருத்தமான ஒன்றே.

நிலவும் (ETERNAL) சுடர் சூழ் ஒளிமூர்த்தி - பரமனின் திருமேனி ஒளிவடிவம் என்பது நேரடிப்பொருளாக இருந்தாலும், ஒளி என்பது ஞானத்தையும் குறிக்கிறது. அவன் ஞான வடிவானவன் (icon of effulgent knowledge), அவனைப் பற்றினாலே அறியாமை இருள் அகலும் என்று கொள்ள வேண்டும். அதுவே உய்வுக்கு முதல் படி.

நெடியாய் - ஆதியும் அந்தமும் இல்லாது உயர்ந்து பெருகி நிற்பவன் (All Pervading) எனும்போது, அவனே பரம்பொருள் என்று தெளியலாம்.

அடியேன் ஆருயிரே - தன் ஆன்மாவில் அந்தப் பரந்தாமன் கலந்து விட்டதாக ஆழ்வார் அருளுவது அத்வைதக் கோட்பாடு போலத் தோன்றினாலும், "ஆன்மாவை ஆள்பவன்" (Soul's Master) என்பதே சரியானது.  திருமால் ஆனவன் தனது வடிவழகையும், கல்யாண குணங்களையும் காட்டிக் காட்டியே ஆழ்வாரை மறுக  வைத்தான் என்பது புலப்படுகிறது :-)

திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து -  பூமிப்பிராட்டிக்கு அழகிய ஆபரணம் போல விளங்குவது திருமலையாகிய திவ்விய தேசம் என்பதால் தான் அது "திலதம் உலகுக்காய் நின்ற"து. அதனால் தான், ஸ்ரீநிவாசன் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமும் கூட.

குலதொல் அடியேன் = குலம் + தொல் + அடியேன் .... குலப்பழமையாக அடிமை (தொண்டு) செய்பவன். இங்கு பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டில் வரும் "அபிமான துங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்" என்ற பாசுர வரியை நினைவு கூர்கையில், ஆழ்வார்கள், தாங்கள் மட்டுமல்லாமல், தங்கள் தலைமுறை முன்னோர்களும் சீரிய வைணவ அடியாராக இருந்ததைக் குறிக்கவே "தொல்லடியேன், பழவடியேன்" என்ற சொல்லாட்சியை பாசுரங்களில் பயன்படுத்தினர் என புரிந்து கொள்ளலாம்.

உன பாதம் கூடும் ஆறு கூறாயே - மேலே சொன்னபடி, "குல பரம்பரையாக தொண்டு செய்து வரும் என்னை  நீ நோக்காவிடில் வேறு எவர் நோக்கி ரட்சித்து உய்வளிக்க (திருவடி நிழல் தர) முடியும்"  என்று உரிமையோடு நம் ஆழ்வார் பெருமாளைக் கேட்கிறார்.  ஆக இவ்விஷயத்தில் பரமனுக்கென்று தனியாக தெரிவு என்பது கிடையாது, ஆழ்வார் கேட்பதே அவனது விருப்பத்தேர்வும் :-))) 

--- எ.அ. பாலா  

Monday, February 29, 2016

தினம் ஒரு பாசுரம் - 66

தினம் ஒரு பாசுரம் - 66


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!


--- பெருமாள் திருமொழி (குலசேகராழ்வார்)


சேரநாட்டில், கோழிக்கோடு தலத்தில், அரச வம்சத்தில் பிறந்த குலசேகரன், பகவான் ஸ்ரீராமபிரான் பேரில் தீவிர பக்தி கொண்டவர். ராமாயண கதாகாலட்சேபம் நடந்த சமயங்களில் கூறப்பட்டவற்றை, ராமர் மேல் அவருக்கிருந்த அன்பினால், வெகு காலத்திற்கு முன் நடந்தேறிய ராம வரலாற்றை அன்று தான் நடப்பதாக எண்ணிக் கொள்ளும் வழக்கம் உடையவர் இந்த ஆழ்வார்! இதனால், அவரிடம் ராமகதையை விவரிப்பவர்கள், ராமருக்கு துன்பம் நேர்ந்த பாகங்களை சுருக்கியும், ராமரின் கீர்த்தியையும், வீரத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாகங்களை விரிவாகவும் உரைத்து வந்தனர்! பெருமாளுடைய (ஸ்ரீராமர்) இன்ப துன்பங்களை தனது சுகதுக்கங்களாக கருதியதால் குலசேகரருக்கு 'பெருமாள்' என்ற திருநாமமும் உண்டு.

பெருமாள் திருமொழியில், ராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடுவது போல் அமைந்த மிக அழகிய பாசுரங்கள், ராமன் மேல் அவருக்கிருந்த பேரன்பில் விளைந்தவை!

பாசுரப்பொருள்:

செடியாய வல்வினைகள் - (மானிடப்பிறவியில்) பெருகும் தன்மை கொண்ட கொடிய பாவங்களை
தீர்க்கும் திருமாலே - ஒழிக்க வல்ல (பரம்பொருளான) திருமாலே
நெடியானே வேங்கடவா -  உயர்ந்து நிற்கும் திருவேங்கடத்து அண்ணலே
நின் கோயிலின் வாசல் - உனது (திருமலைக்) கோயில் சன்னதியின் வாசலில்
அடியாரும் வானவரும் - (உனது) அடியார்களும் இமையவரும்
அரம்பையரும் - தேவ மகளிரும்
கிடந்தியங்கும் - ஏறிக் கடந்து செல்லும்
படியாய்க் கிடந்து - (ஒரு) படியாகக் கிடந்து
உன் பவளவாய் காண்பேனே! - உனது பவளச் செவ்வாய் அழகை (எப்போது) கண்டு மகிழ்வேனே !

பாசுரக்குறிப்புகள்:

திருப்பதி மலையில் வீற்றிருக்கும் திருமால், வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்று பூதேவியை தன் கொம்புகளால் மீட்டுக் கொண்டு வந்ததாகப் புராணம் கூறுகிறது.

செடியாய வல்வினைகள் - "செடி" என்பதற்கு பல பொருள்கள் உண்டு. அவை "புதர்; நெருக்கம்; பாவம்; தீமை; துன்பம்; தீநாற்றம்; அற்பம்; ஒளி; குற்றம்".
"செடி" என்பதை புல்/புதர் என்று எடுத்துக் கொண்டால், மானிடப்பிறவியில் வளர்ந்து கொண்டே இருக்கும் இயல்புடைய பாவங்களை ஆழ்வார் குறிப்பிடுகிறார் என்று தெளியலாம். "செடியார்  வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே" என்று நம்மாழ்வாரும் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றில் அருளியிருக்கிறார்.  தீமை/துன்பம் என்று பொருள் கொண்டாலும் பொருத்தமே. "நமக்குக் கேடு விளைவிக்கும் கொடும்பாவங்கள்" என்றாகிறது.   ஆக,  நமது கொடிய பாவங்களைக் களைய வல்லவன், இக்கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமலை வாழ் எம்பிரான் ஒருவனே என்பது பாசுரம் தரும் செய்தி.

நெடியானே - வாமன வடிவத்தில் வந்து பின் வானுக்கும் மண்ணுக்குமாய் நெடிதுயர்ந்து நின்ற  திரிவிக்கிரமனை  ஆழ்வார் போற்றுவதாகக் கொள்வது தகும்.

அடியாரும் வானவரும் அரம்பையரும் - மண்ணவர், விண்ணவர் என்று சகலரும் அடி பணியும் திருத்தலம், கோவிந்தன் எனும் ஸ்ரீநிவாசன் அருள் பாலிக்கும் திருமலையே! திருவேங்கடமுடையானின் அடியவரை, தேவ கணங்களுக்கு நிகராகச் சொல்வதாகக் கொள்வதிலும் ஒரு நயம் உள்ளது தானே!

கிடந்து இயங்கும் - முந்தைய 2 பாசுர இடுகைகளில் விளக்கிய  "சென்று சேர்", "அமர்ந்து புகுந்து"  போல, இதற்கும் நயம் சார் விளக்கம் தரலாம். "கிடந்து" என்பது சரணாகதித்துவத்தைச் சொல்கிறது. அடிப்பற்றலுக்குப் பின்னரே "இயக்கம்" வருகிறது.  எத்தைகைய இயக்கம்?  

மருள் இல் இயக்கம் --- அறியாமை இருள் தரும் மயக்கம் நீங்கிய, பேரின்பத்தை நோக்கிய ஆன்ம இயக்கம்! இங்கு அறியாமை என்பது, புலன்சார் இன்பங்களுக்கு அடிமையாய் இருத்தல், பரமனே கதி என்ற புரிதல் இன்றி இருத்தல், அகந்தை, பொறாமை, பிறர்க்குத் தீது நினைத்தல்/செய்தல்  என பலவகைப்படும்.

இதை "புலன் சார்"  நல் இயக்கமாகவும் பார்க்கலாம். எங்ஙனம்? வாயானது பரமனைப்  போற்றுகிறது, கண்ணானது அவன் திருவழகைப் பார்க்கிறது (உன் பவளவாய் காண்பேனே!), செவியானது சக அடியவரின் ஹரி நாம சங்கீர்த்தனத்தைக் கேட்கிறது.

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே - இப்பாசுர வரியே, திருமலைக் கோயிலின் (பிற விஷ்ணு ஆலயங்களிலும் கூட) உள்வாயிற்படி, "குலசேகரன் படி" என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்.

--- எ.அ. பாலா

Friday, February 26, 2016

தினம் ஒரு பாசுரம் - 65

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா 

நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே


நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே 


புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே


---நம்மாழ்வார் (திருவாய்மொழி)

இன்று இன்னொரு திருவேங்கடமுடையான் திருப்பாசுரத்தை அனுபவிக்கலாம். திருக்குருகைப்பிரான் அருளிய 1102 பாசுரங்களில், கோயிலிலும், இல்லத்திலும்  தினம் ஓதுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பதிகங்களின்  (12 X 11 = 132 பாசுரங்கள்) தொகுப்பு  "கோயில் திருவாய்மொழி" என்று அழைக்கப்படுகிறது. இப்பாசுரம், அத்தொகுப்பில் வருகிறது. அற்புதமானதொரு பாசுரம் இது.

பாசுரப்பொருள்:

அகலகில்லேன் - "(உன்னை விட்டு) பிரிய மட்டேன்
இறையுமென்று - ஒரு நொடியும்" என்று
அலர்மேல் மங்கை - தாமரை  மலரில் அவதரித்த திருமகள் ஆனவள்
உறை மார்பா - தங்கி இருக்கும் திருமார்பை உடையவனே!
நிகரில் புகழாய் - ஒப்பில்லா பெருமை வாய்ந்தவனே!
உலகம் மூன்றுடையாய் - நாகலோகம்,பூவுலகம், வானுலகு என்ற மூவுலகங்களின் நாயகனே!
என்னை ஆள்வானே - என்னை அடிமையாக ஏற்றவனே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் - நிகரற்ற தேவர்கள் மற்றும் முனிவர்களின்
விரும்பும் திருவேங்கடத்தானே - பேரன்புக்கு பாத்திரமான, திருமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணலே!
புகல் ஒன்றில்லா - தஞ்சம் புக (வேறு) இடம் ஒன்றுமில்லாமல்
அடியேன் - (உன் பக்தனான) நான்
உன் அடிக்கீழ் - உனது திருவடியின் கீழே
அமர்ந்து புகுந்தேனே - தங்கி சரண் அடைந்தேனே !




பாசுரக்குறிப்புகள்:
வைணவர்கள் பிரபந்தப் பாசுரங்களை இசை நயத்துடன் ஓதும்போது, செவிக்கு இனிமையாக இருக்க வேண்டி, கடினமான சொல் ஏவல்களை தவிர்ப்பர்.  "ற்ற" என்பதை "த்த" என்றும், "ன்ற" என்பதை "ன்ன" என்றும் திருத்தியே ஓதுவர். இப்பாசுரத்தை எடுத்துக்கொண்டால் ஓதுவது இப்படி இருக்கும்.

அகலகில்லேன் இறையுமென்னு அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்னுடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்னில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

'போற்றி" என்பது "போத்தி" என்றே ஓதப்படும் ( அன்னு இவ்வுலகம் அளந்தாய்  அடி  போத்தி - திருப்பாவை  )
"கற்று" என்பது "கத்து" ஆகிவிடும் (கத்துக்  கறவை கணங்கள்  பல கறந்து - திருப்பாவை)


இது ஆழ்வாரின் பேரன்பை வெளிப்படுத்தும் எளிமையான பாசுரமே.  நயம், உட்பொருள் சார் குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.

"அகலகில்லேன் இறையுமென்று" -  ஒரு நொடியும் (இறையும்) பிரிந்திருக்க மாட்டேன் என்று பிராட்டியே பரமன் மார்பில் குடி கொண்டு விட்டதில் அடியவர்க்கு 2 செய்திகள் உள்ளன. ஒன்று,  திருமாலை சிக்கெனப் பற்றி சரண் புகுவதே உய்வுக்கான வழி. இரண்டு, நாம் தவறுகள் செய்தாலும், நமக்கு அருள் செய்ய  பரிந்துரைக்க (புருஷகாரம்) அக்கடல் அன்னை அப்பரந்தாமன்  கூடவே வாசம் செய்கிறாள்.

திருமாலுக்குரிய கல்யாண குணங்களில்  நான்கு குணங்கள் மிகவும் ஏற்றமானவை. அவை
1. வாத்சல்யம் (பேரன்பு)
2. சுவாமித்துவம் (தலைமையான இறைத்தன்மை).  அதாவது கடவுளர்க்கெல்லாம் தலைமைத்தன்மை உடையவனாக  இருக்கும் சிறப்பைக் கூறுவது
3. சௌசீல்யம் (ஏற்ற தாழ்வு பாராமை). அதாவது உயர்ந்தவன்/தாழ்ந்தவன், அறிவாற்றல் மிக்கவன்/குறைந்தவன்  என்ற பேதங்கள் பாராமல் அருளுவது
4. சௌலப்யம் (எளிமைத்தன்மை ). அதாவது, உலகமாயைக்கு அப்பாற்பட்டவனான  பரந்தாமன் மனித வடிவில் வந்து அடியவரோடு வாழ்வது / உதவுவது.

தன்னைச் சரணடையும் அடியவரிடம் பரமன் இவற்றைக் காட்டுகிறான்.   அவதார காலங்களில், இராமனாக, கிருஷ்ணனாக, அவன் நேரடியாக அவற்றை வெளிப்படுத்தியது நாம் அறிந்ததே, குகன், அனுமன் , விபீடணன், யசோதா, அருச்சுனன், திரௌபதி, குசேலன்  என்று பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.மேற்கூறிய 4 குணங்களும் இப்பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளன.

"நிகரில் புகழாய்" எனும்போது  வாத்ஸல்யத்தையும்,  "உலகம் மூன்றுடையாய்" எனும்போது  சுவாமித்துவத்தையும், "என்னை ஆள்வானே" என்று சௌசீல்யத்தையும், "நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்  திருவேங்கடத்தானே" எனும்போது  சௌலப்யத்தையும் ஆழ்வார் குறிப்பில் உணர்த்துகிறார்.

"நிகரில் அமரர்" - ஏன் தேவர்களை ஒப்பில்லாதவர் என்கிறார் ஆழ்வார்? பரமபத வாசம் கிடைக்காவிட்டாலும், திருமாலை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கும், அவனது நெருக்கத்தை அனுபவிக்கும் உரிமை உடையவர்கள் அந்த வானவர்கள்! 

"அகலகில்லேன் இறையுமென்று" என்பதை  ஆழ்வார் தன்னைப்பற்றி  சொல்லிக் கொள்வதாக அணுகுவதிலும் ஒரு சுவை இருக்கிறது. "உன்னை விட்டுப் பிரியவே கூடாது என்று" என்று ஆழ்வார் பாசுரத்தைத் தொடங்கி, உடனடியாக அவருக்கு பெருமாளின்  கல்யாண குணங்கள் நினைவுக்கு வந்து அடுத்த 2 அடிகளில் அவற்றைப் போற்றி விட்டு மீண்டும் 4வது வரியில் "வேறு புகல் எதுவுமே இல்லாத எளியனான நான் உன்னிடம் பூரண சரணாகதி அடைந்து விட்டேன்" என்று அவனைப் பிரியாத நிலைக்கு தான் என்ன செய்தார் என்பதைக் கூறி பாசுரத்தை நிறைவு செய்கிறார். கடைசியில், திருவடி நிழலை கன்ஃ பர்ம் பண்றதுக்குத் தான் நம்ம ஆழ்வார் நடு 2 அடிகளில் "எவ்வளவு பெரிய ஆள் நீ!" என்று பரமனின் சீர்மிகு குணங்களைப் போற்றுகிறார் போல :-)

உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே - முந்தைய பாசுர இடுகையில் சொன்ன  "சென்று சேர் திருவேங்கட மாமலை" போல இதிலும் பொருள் பொதிந்துள்ளது. அவசர கதியாக, தடாலடியாகப்  புகும் சரண் அன்று இது!  இது, தவமிருந்து, உடலும், ஆன்மாவும் ஒன்றுபட்ட நிலையில் அவன் திருவடியைப் பற்றுவது. "அமர்ந்து" என்பது உடல் சார்ந்த (Physical) அமைதியைக் குறிப்பதாகவும் "புகுந்தேனே" ஆன்மா  சம்பந்தப்பட்டதாகவும் (of spirit, spiritual) கொள்ளலாம் தானே?

---எ.அ. பாலா

Monday, February 22, 2016

தினம் ஒரு பாசுரம் - 64

தினம் ஒரு பாசுரம் - 64

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் 

அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் 


சென்று சேர் திருவேங்கட மா மலை 


ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே


-திருவாய்மொழி (நம்மாழ்வார்)


பொருள்:

குன்றம் ஏந்திக் - கோவர்த்தன மலையை (தனது ஒரு விரலால் உயர்த்திப் பிடித்து
குளிர் மழை காத்தவன் - (ஆயர் குல மக்களை) குளிர்ந்த பெருமழையிலிருந்து  காத்தவனும்
அன்று - முன்னொரு காலத்தில்
ஞாலம் அளந்த பிரான் - (தனது திருவடிகளால்) உலகங்களை அளந்த நம் தலைவனும்
பரன் - (அனைத்து உயிர்களையும் ரட்சிக்கும்) எம்பெருமானும்
சென்று சேர் - சென்று தங்கி (அருள் பாலிக்கும்)
திருவேங்கட மா மலை ஒன்றுமே -  திருமலை ஒன்றை மட்டுமே
தொழ  - (போற்றி) தொழுதோமேயானால் 
நம் வினை ஓயுமே - நமது பாவங்கள் யாவும் தொலைந்து போகுமே 




பாசுரக்குறிப்புகள்: 

நம்மாழ்வாருக்கு (ஏன் எல்லா ஆழ்வார்களுக்கும்) உகந்த கிருஷ்ண மற்றும் த்ரிவிக்ரம அவதாரங்கள் பாசுரத்தில் சுட்டப்படுகின்றன. அவற்றின்  பெருமை வாயிலாக,  கலியுகத்தில் அர்ச்சாவதார கோலத்தில் பெருமாள் திருவேங்கடமுடையானாக எழுந்தருளியுள்ள திருமலை திவ்விய தேசத்தின் மேன்மையை ஆழ்வார் பாசுரத்தில் போற்றுகிறார்.  கலியுகத்தில் "போற்றப் பறை தரும் புண்ணியன்" ஆனவன் அர்ச்சாவதாரா ரூபத்தில் அருளும் புண்ணியத் தலங்களில் தலையான மூன்றில் ஒன்று திருமலை. மற்றவை அவன் பள்ளி கொண்ட திருவரங்கமும், திருமந்திரம் அருளிய பத்ரிகாசிரமும் ஆகும்.


 கலியுகத்தில் திருவேங்கடமுடையான் ஒருவனைப் பற்றினாலே போதுமானது என்று அடியவர் நமக்கு ஆழ்வார் அறுதியிட்டுக் கூறுகிறார்.  நம் தீவினைகள் அனைத்தையும் அழித்து நம்மை தடுத்தாட்கொள்ள வல்லான் அவன் ஒருவனே என்கிறார்.


சுட்டப்பட்ட 2 அவதாரச் செயல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காணலாம். தமது வலிமையால் அகந்தை கொண்டவர்கள் (இந்திரன், மாவலிச் சக்கரவர்த்தி) தவறை உணர்ந்து அப்பரமனைச்  சரண் புகுந்த செய்தி இரண்டிலும் வெளிப்படுகிறது அல்லவா?

கிருஷ்ண அனுபவத்துக்கு ஒரு வடிவம் கொடுத்தால் அது நம்மாழ்வார் என்னும் அளவு, கிருஷ்ண பக்திப் பேருவகையில் திளைத்து நமக்கு திராவிட வேதம் அருளியவர், வைணவத்தின் ஆதி குருவான, திருக்குருகைப் பிரான்!

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் - ஆயர்கள் ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுத்து, அவனுக்குப் பல்வகையான  உணவுகளைப் படைப்பது வழக்கம். ஒரு சமயம் கண்ணபிரான், சூரியனும், வருணனும், கோவர்த்தன மலையும் சேர்ந்தே நமக்கு எரிக்க விறகும், உண்பதற்கு காய்கனிகளும், பசுக்களுக்குப் புல்லும் தருகையில், இந்திரனுக்கு விழா எதற்கு என்று ஆயர்களைத் தடுத்து விட்டான்.

அகந்தையின் காரணமாக கடுஞ்சீற்றம் கொண்ட இந்திரன், புயல் காற்றையும், பெருமழையையும் உண்டாக்கி (கண்ணனின் அன்புக்குரிய) ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி செய்தான். அப்போதும் அந்த மாயக்கண்ணன் இந்திரன் மேல்  கோபப்படவில்லை. குழந்தையிடமிருந்து ஒன்றைப் பிடுங்கிக் கொண்டால் அது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் என்பதை அறியாதவனா அந்தப் பரந்தாமன் :-) ஆனால், இந்திரனின்  அகந்தை அழிய  வேண்டும் , அவனுக்கு புத்தி வரவேண்டும் என்பதற்காகவே கண்ணனின்  "குன்றம் ஏந்தி குளிர்மழை காத்த" விளையாட்டு!

சென்று சேர் திருவேங்கட மாமலை - பரமன் சென்று தங்கி அருள் பாலிக்கும் திருமலை என்பது நேரடிப்பொருள். இதை இன்னொரு விதமாக பொருள் கொள்வதிலும் நயம் உள்ளது. அதாவது அடியவரான நாம் சென்று சேர வேண்டிய இடம் அந்த திருவேங்கட மாமலையே என்றும் கொள்ளலாம்.  அங்கு சென்றால் போதும் அல்லது சேர்ந்தால் போதுமே! எதற்கு "சென்று சேர" வேண்டும்? செல்லுதல் என்பது உடல் சார்ந்தது, சேர்தல் என்பது நம் மனம் (ஆன்மா) சார்ந்தது. அடியவரின் உடலும் உள்ளமும் ஒத்துழைத்தால்  தான், இறைவனைப் பற்ற இயலும், உய்வுக்கான பாதையில் பயணிக்க முடியும்.  அதாவது மெய்/ஆத்ம சுத்தி என இரண்டும் தேவை.

உய்வு (பரமபதம்/மோட்சம்) என்பது அழிவில்லா ஆன்மாவுக்குத் தானே! உடலுக்குத் தொடர்பு இல்லையே, என்று நமக்குத் தோன்றும். இவ்வுலகில் ஆன்மா தனியாக இயங்குவதில்லை, உடல் என்ற வாகனத்தின் பாதையோடு பிணைந்தது தான் ஆன்மாவின் வாழ்க்கையும்

மேலே சொன்னதை நம்மாழ்வார் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வுடன் ஒப்பு நோக்கினால் "சென்று சேர்" என்பதின் சாராம்சத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  பின்னாளில் நம்மாழ்வாருக்கு சீடரான மதுரகவியார், ஆழ்வாரை முதலில்  சந்தித்தபோது "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அருளினார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது. இங்கே செத்தது என்பது உடல், சிறியது என்பது உயிர் (அ) ஆன்மா

எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அவ்வுடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்பவே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞானத்தை உணர்வதில் உடலெனும் கூடுக்கும் பங்கிருக்கிறது என்ற செய்தியும் இதில் பொதிந்திருப்பதாகக் கொள்ளலாம்! ஆக, ஆன்மா உய்வுற (முக்தி ) ஒரு பிறப்பே போதுமானதாகவும் இருக்கலாம், பல பிறப்புகளும் தேவைப்படலாம்.

--- எ.அ.பாலா

Sunday, February 07, 2016

"எங்க தெரு" நாய்கள்

பராசக்தி ஸ்டைலில் சொல்லணும்னா நாய்களின் ”கூடாரமாகி” விட்டது எங்கள் தெரு. குறைந்தது, 12-15 நாய்கள் இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் எனது தெருவில் வசிக்கும் சமவயதினரான நண்பர் ஒருவர் தான். அவர் ஒரு மகா நாய்ப்பிரியர், பெர்முடாஸ் போட்ட பைரவர் போலவே காட்சியளிப்பார். அந்த நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வந்தார். ஒரு 6 மாதங்களுக்கு முன் ஒரு விடியற்காலை வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, ஐந்தே நிமிடங்களில் மரித்துப்போனார். அத்தனை ஆரோக்கியமாகத் தோன்றிய ஒருவர் இப்படி திடீரென்று மரணித்தது எங்கள் தெருவில் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது! சரி, மேட்டருக்கு வருவோம்.

அவரின் பிரிய தெரு நாய்களுக்கும் அவர் மரணம் அதிர்ச்சியோடு, சோகத்தையும் தந்திருக்க வேண்டும். ஒரு 10 நாட்கள், இரவு வேளைகளில் ஆர்ப்பாட்டமாக குரைத்து, தெருவுக்குள் நுழைந்த எந்த ஒரு உயிரினத்திற்கும், பயமும், வெறுப்பும் ஏற்படுத்திய அவை, அமைதி காத்தன. அவ்வப்போது, அழுகையான ஓலத்தை மட்டும் வெளிப்படுத்தின. இரவுகளில் பல தடவை எங்கள் நிம்மதியையும், உறக்கத்தையும் குரைத்துக் குலைத்த நாய்கள் இப்படி ஆகி விட்டனவே என்று நானே அனுதாபப்பட ஆரம்பித்தபோது, எல்லா நாய்களும் பழைய நிலைக்குத் திரும்பி அவைகளும் மனிதர்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல என்று நிரூபித்தன.

என் அனுபவத்தில், எங்கத் தெரு நாய்கள் ரேசிஸம் அற்ற லிபரல்கள். இரவில் தெருவுக்குள் நுழையும் எவருக்கும், சாதி, இன, மத பேதமின்றி ஒரே வகை கவனிப்பு தான். ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை செல்லும் வரை, பின்னாலேயே கூட்டமாகச் சென்று பலவிதமாக சவுண்ட் விட்டு பயத்தையும் எரிச்சலையும் ஏற்றுவது. ஆனால், இதுவரை யாரையும் கடித்ததில்லை. ஆனால் பாருங்கள், அவைகள் கடிக்காது என்பது புதிதாக வரும் ஒரு நபருக்குத் தெரிவதில்லை. தூக்கம் வராத அல்லது தூக்கம் கெடுக்கப்பட்ட இரவுகளில், எங்கத் தெரு நாய்களின் நடவடிக்கைகளை பால்கனியில் நின்றபடி ”குரைப்பாராய்ச்சி” செய்ததுண்டு! சில சமயங்களில், வெறி அடங்காத குரைப்பை நிறுத்த தமிழ் சினிமா சொல்லித்தந்த ஒரு பாலபாடத்தையும் பிரயோகித்திருக்கிறேன், பால்கனியிலிருந்து பக்கெட் தண்ணீரை அவற்றின் மீது ஊற்றுவது (அ) இறைப்பது. பலனும் கிட்டியிருக்கிறது, தற்காலிமாக இருப்பினும். இனி எனது இரவு ஆராய்ச்சியின் முக்கிய முடிவுகள்:

 1. உற்சாகத் தருணங்களில் நாய்கள் மென்மையாகக் குரைக்கின்றன. புணர்ச்சிக்கான மார்கழி மாத பூசல்களின்போது குரைத்தலைக் குறைத்து, பற்களைக் காட்டி, நாய்கள் ஏற்படுத்தும் “ஓடிப்போயிடு மவனே, கொன்னேபுடுவேன்” வகை அடித்தொண்டை உறுமல்கள், அமானுஷ்ய அச்சத்தை விளைவிக்க வல்லவை.


பல மார்கழிகள் கண்ட (படத்தில் காணப்படும்) கறுப்பழகி ஒன்று பலப்பல குட்டிகளை ஈன்று, தெருவின் ”நாய்த்தொகை” குறையாமல் இருக்கும்படியாக சேவை ஆற்றியுள்ளதை இங்கே குறிப்பிடவேண்டும். தாய்மையால் பக்குவம் அடைந்த அது குரைப்பதேயில்லை!

2. மூத்தோர் இளையவரை டிசிப்ளின் செய்யும் பொருட்டும், குரைத்தல் நிகழ்கிறது.

3. வேற்றுத்தெரு நாய்கள் படையெடுப்பின்போது, போர்க்களமாகும் தெருவில் கேட்கும் குரைப்புச்சத்தம், Dolby ஸ்டீரியோவில் முழு வால்யூமில் ஜுராசிக் பார்க் படத்தை பார்க்கும் எஃபெக்டை தர வல்லது.

4. சில அரிதான சமயங்களில், ஒற்றை வேற்றுத்தெரு நாய், எங்கள் தெரு (நாய்) ஜோதியில் ஐக்கியமாக வர முயலும்போது, குரைத்தலோடு நிகழும் விஷயங்கள் சுவாரசியமாய் இருக்கும். அந்த நாய், தலையைத் தொங்கப்போட்டு, கூனிக்குறுகி வந்தாலும், எங்கத் தெரு நாய்கள் அதை உடனே கூட்டாளியாகச் சேர்ப்பதில்லை. ரொம்பவும் Harass பண்ணும். போக்கடமற்ற புதிய நாயும், ஓடிப்போகாமல், ஒரு காருக்கு அடியில் ஒளிந்து கொண்டு, கெஞ்சிய வண்ணம் இருக்கும். சில சமயங்களில், தலைவரின் முடிவுப்படி, புதிய நாய் அங்கீகரிக்கப்படும். அல்லது, கார் மாற்றி மாற்றி வெகுவாக அலைக்கழிக்கப்பட்டு, கடியும் பட்டுத் துரத்தப்படும். இந்த குரைத்துத் துரத்தும் வைபவத்தைக் காண்பது, டிவிட்டர் அரட்டையை விட டைம்பாஸாக இருக்கும்.



5. திருவல்லிக்கேணியின் மூத்தகுடி என்று சொல்லும் அளவு பிரபலமானவை மாடுகள். இரவில் ஒரு மாடு எங்கள் தெருவுக்குள் நுழைந்து விட்டால், அதன் கதி அதோகதி தான். எல்லா நாய்களும் அதைச் சூழ்ந்து கொண்டு பண்ணும் Ragging-ல் ”கொம்பைக் காணோம், வாலைக் காணோம்” என்று (நடக்கவே யோசிக்கும்) அந்த சோம்பேறி மாடு ஓடுவது செம :-)

6. எங்கத் தெரு நாய்கள் டிராஃபிக் விதிகளை மதிப்பவை. தெருவில் செல்லும் பைக், சைக்கிள் ஓவர் ஸ்பீடிங் செய்தால் மட்டுமே துரத்தும், இல்லையெனில், சின்னக்குரைத்தலோடு விட்டு விடும்.

மேற்சொன்ன எங்கத் தெரு இரவுக்காவலர்கள், “இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம், இது தான் எங்கள் உலகம்” என்பதற்கேற்ப பகல் வேளைகளில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் சுருண்டு தூங்கும்போது, ‘இதுகளா இப்படி?” என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

---எ.அ.பாலா

Wednesday, February 03, 2016

லாங் லாங்கர் லாங்கஸ்ட் By டீக்கடை எனும் @teakkadai

 டிவிட்டர் நண்பர் @teakkadai (https://twitter.com/teakkadai) அவர்களின் எழுத்துகளின் ரசிகன் நான். மிக நேர்த்தியாக, யதார்த்தமாக அதே நேரம் எளிமையாகவும் எழுதுபவர். சமீபத்தில் ஒரு சிறுகதையை டிவிட்லாங்கரில் பதிப்பித்திருந்தார்.  அதை உங்கள் வாசிப்புக்கு என் வலைத்தளத்தில் பகிர்கிறேன்.  கதைக்கு அவர் தலைப்பு இடவில்லை. ஆகவே, கதைத் தலைப்பு மட்டும் என்னுடையது.
--எ.அ.பாலா

லாங் லாங்கர் லாங்கஸ்ட் - By @teakkadai

மதியத்தூக்கம் கலைந்து மாடியில் இருந்து கீழிறங்கி வந்தேன். வீடு வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஏதுமில்லாமல் இருந்தது. அம்மாவும், மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டீ வேண்டுமா எனக் கேட்ட அம்மாவிடம் ம் என்று சொல்லிக்கொண்டே திவ்யா எங்கே? என்று கேட்டேன். ”அவ எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நம்ம பழைய தெருவுக்கு போயிருக்கா” என்றார். தங்கை திவ்யாவும், நானும் ஒவ்வொரு வருடம் பொங்கல் விடுமுறையிலும் ஊருக்கு வருவதை வழக்கமாக்க் கொண்டவர்கள்.

சிறிது நேரம் கழித்து பிள்ளைகளுடன் திரும்பி வந்த திவ்யா, ”ராதிகாவைப் பார்த்தேன். ஆளே உருக்குலைஞ்சு போயிட்டா, முடியெல்லாம் கொட்டி, இருக்குற முடியும் வெள்ளையாகி, கூன் விழுந்து பார்க்கவே பாவமா இருந்துச்சு என்றாள். பாவம் என்ன செய்யுறது என்று சொல்லியபடியே வெளியே கிளம்பினேன்.

பிறந்த ஊர் என்றாலும் நாங்கள் இப்போது இருக்கும் பகுதி அவ்வளவாக எனக்கு பழக்கம் இல்லாத ஒன்று. எதிர்ப்படுபவர்கள் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கால் போனபடி நடந்து கொண்டிருக்கும் போது ராதிகாவின் நினைவு வந்தது.

ராதிகா, நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் குடியிருந்த பெண். சுற்று வட்டாரத்தில் பிரபலமான ரைஸ்மில் ஒன்றை ராதிகாவின் அப்பா நடத்தி வந்தார். நானும் ராதிகாவும் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆறாம் வகுப்பின் போது அவள் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், நான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் மாறினோம். அவளது அண்ணன் அவளைவிட ஏழு வயது மூத்தவன், அவன் அப்போது வெளியூர் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். ராதிகாவின் தந்தையும் அவரது பங்காளி வகையறாக்களும் பெரிய ஆசாடபூதிகள். வீட்டு விலக்கான பெண்கள் கையால் தண்ணீர் வாங்கிக்கூட குடிக்க மாட்டார்கள்.

அவர்கள் வீட்டிலேயே கொல்லைப்புறம் அருகே ஒரு பெரிய அறையையே அந்த நாட்களில் தங்குவதற்காக கட்டி வைத்திருப்பார்கள். தட்டு டம்ளர் முதல் போர்வை தலையணை வரை கிட்டத்தட்ட ஒரு லாட்ஜ் அறையைப் போலவே அது இருக்கும். அந்த அறையில் உபயோகப்படுத்தவென்றே ஒரு ட்ரான்ஸிஸ்டர் கூட பிரத்யேகமாக அங்கே இருக்கும்.
Drawing courtesy: Anikartick

எனவே ராதிகாவின் அம்மா வீட்டு விலக்கான நாட்களில் ராதிகாவின் அண்ணன் தான் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கிக்கொண்டு வருவான். அவன் ஹாஸ்டலுக்குச் சென்ற பின்னால் அந்த வேலை என் தலையில் விழுந்தது. கொண்டு செல்லும் பாத்திரங்களை வைத்தே ரைஸ்மில் காரருக்கா என ஹோட்டலில் கேட்டு பார்சல் தருவார்கள். ராதிகா சகஜமாக, எங்க அம்மா, லாங் என்று சொல்வாள். இது சில வருடம் நீடித்தது, எட்டாம் வகுப்பு முழுப்பரிட்சை லீவில் ராதிகா பெரிய பெண் ஆனாள். அதன்பின் எனக்கு அந்த வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள், டியூசனில் இருந்து வீடு திரும்பியவுடன், அம்மா என்னிடம் “ரைஸ்மில் காரம்மா வந்திருந்தாங்க, ஏதோ நோட்ஸ் எல்லாம் ராதிகாவுக்கு வேணுமாம்” என்றார். அவள் தந்தை அவளை டியூசனுக்கு அனுமதிப்பதில்லை மேலும் மாத விலக்கான நாட்களில் அவள் பெரும்பாலும் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதால் என்னுடைய டியூசன் நோட்ஸை கேட்டிருந்தாள். என் தங்கையின் மூலம் நோட்ஸ் அவள் வீட்டிற்குச் சென்றது.

இந்நாட்களில் ராதிகாவின் அண்ணன் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் உடல்நிலை சரியில்லாத நாட்களில் வேறுவழியில்லாமல் கடைகண்ணிக்குச் செல்ல என்னையே மீண்டும் அவர்கள் நம்பவேண்டியிருந்தது. தொடர்ந்து ராதிகாவிற்கும் பிளஸ்2 நோட்ஸ், ரெக்கார்டு நோட் என என் தயவு பெரிதும் தேவைப்பட்ட்து. தெருப்பையன்கள் எல்லாம் அவளுக்கு உன்மேல லவ்வு என்றெல்லாம் ஏத்தி விடுவார்கள். சொந்த ஜாதியில் இருக்கும் ரைஸ்மில் வேலைக்காரர்களை கூட வீட்டில் அனுமதிக்காத ராதிகாவின் அப்பா என்னை அங்கே புழங்க விட என் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம் என்பதால் நான் அதை சிரித்துக் கொண்டே கடக்க பழகியிருந்தேன்.

பிளஸ் 2 முடித்ததும் கல்லூரிக்கும் அனுப்ப ராதிகாவின் தந்தைக்கு இஷ்டமில்லை. ஆனால் அவரின் உறவினர்கள், நம்ம ஆட்கள்ல இப்ப படிச்ச பிள்ளைகளைத்தான் கட்டுறாங்க எனச் சொல்லி கல்லூரிக்கு அனுப்ப வைத்தனர். எங்கள் ஊரில் கல்லூரி இல்லாததால் வெளியூர் கல்லுரிக்கு அனுப்பி வைத்தனர்,அங்கே விடுதியில் தங்கிப் படித்தாள். இன்னொரு கல்லூரியில் நானும்.

ராதிகா இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, அவள் அண்ணனுக்கு ஒரு மிகப்பெரிய இடத்து சம்பந்தம் வந்தது. அவள் அப்பா கூட, முதல்ல பொண்ணு கல்யாணம் அப்புறம் தான் பையனுக்கு என்று பிடிவாதம் பிடித்துப் பார்த்தார். ஆனால் அவரின் உறவினர்கள் வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தின் போது பச்சைப் பட்டுப்பாவாடையும், மாம்பழக் கலர் தாவணியும், ஒற்றை ஜடையுடன், நீண்ட மெல்லிய டாலர் செயினுடன் வளைய வந்த அவளைக் கண்ட உறவினர்கள் எங்க பையனுக்குத்தான் உங்க பொண்ணைக் கொடுக்கணும் என்று சண்டையே போட்டார்கள். பந்தி பரிமாறுதலில் ஈடுபட்டிருந்த என்னை அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தாள் என நண்பர்கள் சொல்ல அதை வழக்கம் போல நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

ராதிகாவின் அண்ணன் சென்னையில் செட்டில் ஆகியிருந்தான். நானும் படிப்பு முடிந்து சென்னையில் ஓராண்டு போராடி ஒரு வேலையில் அமர்ந்தேன். என்ன இன்னும் ராதிகாவின் திருமண செய்தி வரவில்லையென யோசிக்கத் தொடங்கியிருந்தேன். ஊருக்கு வந்தபோது, ஸ்வீட் வாங்கிக் கொண்டுபோய் வேலை கிடைத்த விபரத்தை ராதிகா வீட்டாரிடம் சொன்னேன். வீடே களையிழந்து கிடந்த்து. அம்மாவிடம் கேட்ட போது அதெல்லாம் உனக்கெதுக்கு என்று கடிந்து கொண்டார்,

பின்னர் விஷயம் தெரியவந்தது. ராதிகாவிற்கு மாதவிலக்கானது மூன்று, நான்கு நாட்களில் முடியாமல் ஒரு வாரம் பத்து நாள் வரை நீண்டதாம். அதனால் உடல்நிலை தளர்ந்து போனாளாம். தொடர்ந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

இன்னும் ஒரு வருடம் போனது. ராதிகாவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் இளைத்துப் போயிருந்தாள். அவள் வீட்டிற்குச் சென்றபோது லாங்,லாங்கர், லாங்கஸ்ட் ஆயிடுச்சுடான்னு விரக்தியாகச் சிரித்தாள்.

இந்த விசயம் அரசல் புரசலாக வெளியில் தெரிந்ததால் அவர்களுக்கு ஈடானவர்கள் யாரும் சம்பந்தம் பேசவரவில்லை. வசதி குறைவானவர்களோ மாசம் பாதிநாள் அவ படுத்துக்கிட்டானா யாரு வேலையெல்லாம் பார்க்கிறது, தங்க ஊசின்னு கண்ணுல குத்திக்க முடியுமா என ஒதுங்கிக் கொண்டார்கள். ராதிகாவுக்கு 25 வயது ஆன நிலையில் அவர் அம்மா தெருவில் ஒருநாள் எந்த ஜாதின்னாலும் பரவாயில்லை, கேட்டா முடிச்சிடலமுன்னு இருக்கோம் என்று ஜாடை மாடையாக்கூட சொல்லிக் கொண்டிருந்தாராம்.

அந்நேரம் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருந்தோம். லோன் மூலம் வீடுகட்டி முடித்திருந்த நிலையில் நாங்கள் இப்போதிருக்கும் வீட்டிற்கு மாறியிருந்தோம். அதன்பின் தங்கை கல்யாணம், என் கல்யாணம், பிள்ளைகள், சென்னை வாழ்க்கை என அந்த தெருவில் இருந்தே ஒதுங்கி விட்டோம்.

வீடு திரும்பிய பின்னரும் ராதிகாவின் நினைவுகளால் மனம் அலைந்தது. அவள், ஹாலில் மாட்டியிருந்த தன் அண்ணனின் திருமணத்தில் எடுத்த போட்டோவை வெறித்தபடியே என்னிடம் பேசியது ஞாபகம் வந்தது. மாடி காலியிடத்தில் நிலை கொள்ளாமல் உலாத்திக் கொண்டிருந்த போது தங்கை வந்தாள். சில நிமிடம் மௌனமாய் இருந்த அவள், நீ அவள கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஏன் நீ எந்த ஸ்டெப்பும் எடுக்கலை? என்றாள். உங்கண்ணன் மகனான்னு கேட்டு பாசமா தலையத் தடவிக் கொடுத்தா, உன் பேரைச் சொல்லும் போது அவ கண்ணுல இன்னும் காதலப் பார்த்தேன் என்றாள்.

இல்ல, அப்ப உன் கல்யாணம்தான் எனக்கு பெரிசாப் பட்டுச்சு. பணத்துக்காக வேற ஜாதியில கல்யாணம் பண்ணிட்டான்னு இல்ல ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டான்னு உன் புகுந்த வீட்டுல நீ பேச்சுக் கேட்கக்கூடாதுன்னு நெனச்சேன் என்றேன். கண்கள் பனிக்க என்னைப் பார்த்தபடி இறங்கிப் போனாள் என் தங்கை. இரவில், மனைவி, என்னிடம் திவ்யா சொல்றதுல்லாம் உண்மையா? எனக் கேட்டாள்.

சேச்சே, சும்மா அவள திருப்திப்படுத்த சொன்னேன். உண்மையச் சொல்லணும்னா எனக்கு சின்ன வயசில இருந்தே என் மனைவி இந்த உயரம் இருக்கணும், முகம் இப்படி இருக்கணும், இந்தக் கலர் இருக்கனும்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன். அப்படியே நீ இருந்த, அதனால தான் உன்னைய கட்டிக்கிட்டேன் என்றேன். காதலாய் பார்த்தாள்.

காலையில் வாக்கிங் போகும் போது அப்பாவும் உடன் வந்தார், என்னடா திவ்யா சொன்னது உண்மையாடா? உனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தா சொல்லி இருக்கலாமேடா? என்றார். நான் உடனே அப்பா நீங்க எங்களுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டுட்டீங்க, நோயாளி பொண்ணக் கட்டி உங்களுக்கு இன்னும் சிரம்ம் கொடுக்கக் கூடாதுன்னுதான் அதப் பத்தியே யோசிக்கலை என்றேன். என்னை பெருமையாகப் பார்த்தன அவர் கண்கள்.

வீடு திரும்பி, குளிக்கும் போது, பாத்ரூம் கண்ணாடியில் தெரிந்த என் முகம், ஆளுக்கு தகுந்த படி பொய் சொன்னாயே, காமுகா, மாதம் பாதி நாளு தூரமாகிறவளால எவ்ளோ சுகம் கிடைச்சிடும்னு கணக்குப் பண்ணித்தான அவாய்ட் பண்ணுன? எனக்கேட்க குற்ற உணர்ச்சி தாங்காமல் ஷவருடன் சேர்ந்து அழத்தொடங்கினேன்.
**********************************************************

Monday, January 25, 2016

தினம் ஒரு பாசுரம் - 63

 தினம் ஒரு பாசுரம் - 63


முனிவன் மூர்த்தி மூவராகி* வேதம் விரித்துரைத்த புனிதன்*

பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*


தனியன் சேயன் தானொருவனாகிலும்* தன்னடியார்க்கு இனியன் *


எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே. 


திருமங்கை மன்னன் (பெரிய திருமொழி)

இப்பாசுரத்தில், திருமங்கை மன்னன், பக்திப் பேருவகையில், பெருமாளை எப்படி வியந்து போற்றிப் பாடியிருக்கிறார் என்று பாருங்கள் !!! இதற்குப் பொருளுரை என்று ஒன்றை எழுதுவது தேவையில்லை என்றாலும், பாசுரம் சொல்லும் சில சுவையான எண்ணங்களை/செய்திகளை கட்டாயம் பகிர வேண்டும்!

பொருளுரை:
முனிவன் - (எல்லா உலகங்களையும் படைத்துக் காக்கும்) இறைவனும்
மூர்த்தி மூவராகி - நான்முகனையும், சிவனையும் படைத்து மூவர் ஆனவனும்
வேதம் விரித்துரைத்த புனிதன்- நான்மறைகளை விளங்க உரைத்த தூயவனும்
பூவை வண்ணன் அண்ணல் - காயாம்பூ நிறம் கொண்ட, சர்வலோக ரட்சகனும்
புண்ணியன் விண்ணவர்கோன் - தர்மத்தின் நாயகனும், வானோர் தலைவனும்
தனியன் - ஆதி அந்தம் இல்லாதவனும், ஒப்பாரில் சுவாமியும்
சேயன் தானொருவனாகிலும்* - தான் ஒருவன் மட்டுமே மிகத் தொலைவில் இருப்பவனும் (ஆக இருந்தும்)
தன்னடியார்க்கு இனியன் * - தன் அடியவர்களுக்கு (தனது எளிமை குணத்தினால்) இனியவனும்
எந்தை எம்பெருமான்* - என் அப்பனும், என் பெருமானும் ஆன திருமால்
எவ்வுள் கிடந்தானே - திரு எவ்வுள்ளில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஆட்சி புரிகிறான்!


 பாசுரக் குறிப்புகள்: 

”வேதம் விரித்துரைத்த புனிதன்” - திருமங்கை மன்னன் பிறிதொரு பாசுரத்தில், “அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே” என்று ஓர் அன்னப்பறவை வடிவமாய், நான்மறைகளை நாராயணன் அருளியதைப் போற்றியிருக்கிறார்.  அங்கு “உரைத்த” என்று பாடிய ஆழ்வார், இங்கு “விரித்து உரைத்த” எனும்போது, அந்த வேதத்தின் சாரத்தை  பகவத்கீதையாக அர்ஜுனனுக்கு உபதேசித்த கண்ணபிரானைப் பாடுகிறார் என்று கொள்வது பொருத்தமானதே.

நான்மறைகளின் சாரத்தை திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி என நான்கு பிரபந்தங்களாக ஆதிகுருவான (மாறன்) நம்மாழ்வாரை அருளச் செய்த அப்பரந்தாமனைச் சொல்வதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறதல்லவா! ”மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன் ஆறு அங்கம் கூற அவதரித்த”வர் அல்லவா! அதனால் தான் திருக்குருகைப் பிரான் ஆகிய நம்மாழ்வாரை இவ்வாறு ”மறைமுகமாக”ப் போற்றுகிறார் போலும் :-)

"தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு
நால்வேதம் கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே” 


இன்னொரு பாசுரத்தில் திருமங்கை மன்னன், “நால்வேதம் கண்டானே” என்று திருக்கண்ணபுரத்துப் பெருமாளைப் பாடியிருக்கிறார்.  செய்வினைச் சொற்றொடராகவேப் பார்த்தால், “நான்மறைகளை அருளிச் செய்தவனே” என்று நேர்ப்பொருள் கொள்ளலாம்.  ஆனால், குருபரம்பரை வழி வந்த ஞான ஆச்சார்யரான பராசர பட்டர், செயப்பாட்டு வினையாகக் கொண்டு சிறப்பான பொருள் ஏற்படும்படி அருளினார். 

அதாவது, “நால்வேதங்களால் காணப்பட்டவன்” என்று கொள்வதும் ஏற்றதே என்றார் பட்டர் பெருமான். ”உபாயமும் (வழியும்), உபேயமும் (இலக்கும்) தானேயாக, நான்கு வேதங்களாலும் அறுதியிடப் பட்டவன்” எனும்போது பொருட்சுவை கூடுகிறதல்லவா!

தனியன் - திருமாலுக்கு ஒப்பாக இன்னொருவர் அண்டத்தில் இல்லை என்று பொருள். அவன் ஒருவனே, உணர்வதற்கரிய பரம்பொருள்

சேயன் - ”எட்டா தூரத்தில் இருப்பவன்” என்பது நேரடிப் பொருளாக இருப்பினும், இப்பாசுரத்தில், ”எண்ணுதலுக்கு அரியவன், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவன்” என்று கொள்ளல் வேண்டும்

”திரு எவ்வுள்” என்பது மருவி ”திருவள்ளூர்” ஆகிவிட்டது :-) இந்த திவ்விய தேசப்பெருமாளின் திருநாமம் வீரராகவன். பிணி,வினை தீர்க்கும் இறைவன் என்பதால், வைத்திய வீரராகவன் என்றும் அழைப்பர். தாயாரின் திருநாமம் கனகவல்லி. சைவப்பெருந்தகையான இராமலிங்க அடிகளாரும் திரு எவ்வுள் பெருமாளைப் போற்றி திருப்பஞ்சகம் (5 பாடல்கள்) அருளியிருப்பது குறிப்பிடவேண்டியது.

பல்லவர்கள் கட்டிய பழமையான திருக்கோயில் இது. மூலவர் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். சென்னைக்கு அருகே உள்ள திருமழிசையில் அவதரித்த திருமழிசைப்பிரான் என்ற ஆழ்வாரின் (இத்தலப்பெருமாள் பற்றிய) பாசுரமும் பிரசித்தமானது.

“நாகத்தணை குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தணை அரங்கம் பேரன்பில்
நாகத்தணை பாற்கடல் கிடக்கும் ஆதிநெடுமால்
அணைப்பர் கருத்தன் ஆவான்”



ஆழ்வார், பெருமாள் யோக நித்திரையில் துயிலும் திருத்தலங்களை பட்டியலிடுகிறார். திருக்குடந்தை, திருவெஃகா, திருவள்ளூர், திருவரங்கம், திருப்பேர் நகர், திருப்பாற்கடல் மற்றும் திருவன்பில் ஆகிய ஏழு வைணவ திருப்பதிகள் இதில் சுட்டப்பட்டுள்ளன. இந்த ஏழில், ஆழ்வார் அவதரித்த திருமழிசைக்கு அருகே உள்ள, அவர் அடிக்கடி தரிசித்த எவ்வுளுக்கு மட்டுமே “திரு” “வெவ்வுள்” என்ற மரியாதைக்குரிய விளித்தலை கவனிக்கவும் :-)

அன்புடன்
பாலா

Friday, January 22, 2016

தினம் ஒரு பாசுரம் - 62

தினம் ஒரு பாசுரம் - 62

உலவு திரையும் குலவரையும்* ஊழி முதலா எண் திக்கும்*

நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றி விறல் ஆழி வலவன்*

வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*

சலம் சூழ்ந்து அழகாய* சாளக்கிராமம் அடை நெஞ்சே

---திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி)

இப்பாசுரத்தில், நேபாளத்தில், இமயமலை அடிவாரத்தில் இருக்கும் சாளக்கிராமம் திவ்விய தேசத்தை ஆழ்வார் பக்திப் பரவசமாக மங்களாசாசனம் செய்கிறார். இங்கு கோயில் என்று தனியாக எதுவும் தனியாக இல்லை. முக்திநாத் என்ற திருத்தலமே கோயில் தான். கண்டகி நதிக்கரையில் (தாமோதர குண்டம் என்ற இடத்தில்) ஏராளமாகக் காணப்படும் சாளக்கிராம கற்கள் அனைத்திலும் திருமால் அந்தர்யாமியாக உறைந்திருப்பதாக வைணவ மரபு சொல்கிறது.

நாராயணனை சாளக்கிராமத் திருமேனியன் என்று அழைப்பது உண்டு. பெரியாழ்வாரும் தனது திருமொழிப்பாசுரத்தில் “சாளக்கிராமமுடைய நம்பி” என்று கண்ணனைப் போற்றுகிறார்.  முக்திநாத் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடவேண்டியது. வைணவர்கள் சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து பூஜை (இதற்கு திருவாராதனை என்று பெயர்) செய்யும் வழக்கமுண்டு. பல விஷ்ணு ஆலயங்களில் மூலவர் வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலை அணிந்தே காட்சியளிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். படத்தில் சிவப்பாகக் குறித்திருக்கிறேன்.
பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at: http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at: http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at: http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at: http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf









திருமங்கையாழ்வார் 'சகலமும் பரந்தாமனே' என்கிறார் இப்பாசுரத்தில் !

உலவு திரையும் குலவரையும்* - உலாவுகின்ற கடல் அலைகளிலும், பெருமலைகளிலும்
ஊழி முதலா எண் திக்கும்* - காலம் மற்றும் எட்டு திசைகளிலும்

நிலவும் சுடரும்  - நிலவிலும், கதிரவனிலும்

இருளுமாய் நின்றான்* - இருளிலும் (இவ்வாறாக அனைத்திலும் அந்தர்யாமியாக உறைந்து) நிற்பவனும்,

வென்றி விறல் - வெற்றியும், பெருமையும் மிக்க

ஆழி வலவன்* - திருச்சக்கரத்தை தன் வலக்கையில் ஏந்தியவனும்

வானோர் தம் பெருமான்* - இமையவர்க்குத் தலைவனும்

மருவா அரக்கர்க்கு - பகைமை (பாராட்டும்) அரக்கர்க்கு

எஞ்ஞான்றும் சலவன்* - எல்லாக்காலங்களிலும் தீமைகள் செய்பவனும்

சலம் சூழ்ந்து அழகாய* - நீர் சூழ்ந்து எழில் நிறைந்த

சாளக்கிராமம் அடை நெஞ்சே - சாளக்கிராமம் அடைந்து (அப்பெருமானைப்) பற்றி வணங்கு என் நெஞ்சமே!

ஆழ்வார், பரமனே சகலமும் என்பதை இருவிதமாக, எளிமையாக விளக்குகிறார். முதலில் அவன் அந்தர்யாமியாக அனைத்திலும் உறைந்திருப்பதை, அதாவது திருமாலின் அண்டம் வியாபித்த (ALL PERVADING) தன்மையைப் பாடுகிறார். இரண்டாவதாக, அவன் உருவ,வடிவ குணநலன்கள் (கல்யாண குணங்கள்) சிலவற்றைப் போற்றுகிறார். அருவ, உருவ என்று திருமாலின் இருவகைத் தன்மைகளையும் சொல்கிறார்.

”அப்படிப்பட்டவன் சாளக்கிராமத்தில் எழுந்தருளியுள்ளான், உடனே சென்று அவன் திருவடியைப் பற்றித் தொழுதேத்துக” என்று அடியவரான நமக்கு வழி காட்டுகிறார். மிக எளிமையான, அந்தர்யாமித்துவத்தை பறைசாற்றும் அற்புதமானதொரு பாசுரம்! ஆழ்வார் மறவர் குலத்தில் அவதரித்த மாவீரர்  என்பதாலோ என்னவோ, சங்கை விட திருச்சக்கரத்தை அதிகம் பாடியிருக்கிறார் :-)

அன்புடன்
பாலா
 

Wednesday, March 25, 2015

உலகக்கோப்பை கிரிக்கெட் - தென்னாபிரிக்காவின் துரதிட்டம்

இது வரை நடந்த உலகக்கோப்பை-2015 ஆட்டங்கள் அனைத்தையும் மிஞ்சும் வகையில், நேற்று நடந்த தென்னாபிரிக்கா-நியூஜிலாந்து அரை இறுதி ஆட்டம் அமைந்தது. இரு அணிகளும் அபாரமாக ஆடின. தெ.ஆ அணிக்கு அழுத்தமான சூழல்களில் சொதப்புபவர்கள் (Chokers) என்ற பட்டம் பல காலமாக இருந்து வருவது தெரிந்தது தான். ஆனால், அவர்கள் முதலில் பேட் செய்தபோது மன உறுதியுடன் நம்பிக்கையாக விளையாடினர் என்று கூறுவேன். 10 ஓவர்களுக்குள் 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், டுபிளஸ்ஸியும், ரசௌவும் நிதானமாகவே ஆடினர். 100 ஓட்டங்களை எட்ட 24.1 ஓவர்கள் ஆயின. ஆதாம் மில்னேக்கு ஏற்பட்ட காயத்தால் அவருக்கு பதிலாக பந்து வீசிய இளைஞர் மாட் ஹென்றி அற்புதமாக பந்து வீசி தனது முதல் 5 ஓவர்களில் 9 ரன்களே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

டிவிலியர்ஸ் களமிறங்கிய பின் தெ.ஆ அவசர/அதிரடி கதிக்கு மாறியது. வில்லியம்சன் 23வது ஓவரில் ஒரு ரன் அவுட்டையும், அடுத்த ஓவரில் ஒரு காட்ச்சையும் சொதப்பியதில், டிவிலியர்ஸ் 2 முறை தப்பிப் பிழைத்தார். தெ,ஆ 38 ஓவர்களில் 216/3 (டிவிலியர்ஸ் 60, டுபிளஸ்ஸி 82) என்ற மிக வலுவான நிலையில் இருந்தபோது, 1992-லும், 2003-லும் சதி செய்த மழை மீண்டும் தன் வேலையைக் காட்டியதில், ஆட்டம், 43 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. இருந்தும் மிச்சமிருந்த அந்த 5 ஓவர்களில், மில்லரின் மகா அதிரடியில் (49 ரன்கள், 18 பந்துகளில்) தெ.ஆ 65 ஓட்டங்கள் எடுத்தது. டக்வொர்த்-லூயி கணக்குப்படி, நியூஜியின் இலக்கு 43 ஓவர்களில் 298 (பிரதி ஓவருக்கு கிட்டத்தட்ட 7 ரன்கள்) என்று நிர்ணயிக்கப்பட்டு, ஒரு அருமையான “துரத்தலுக்கு” அடித்தளம் அமைக்கப்பட்டது.

நியூஜி பேட்டிங்: மெக்கல்லம் ஆட்டம் இலக்கு பொறுத்து அமையும் ஒன்றல்ல. இலக்கு 100,200.300 என்று எதுவாக இருந்தாலும், ஐபில் டி20 என்றாலும் உலகக்கோப்பை ஒரு நாள் ஆட்டம் என்றாலும், அதிரடி தான் அவர் பாணி. ரஜினி ஸ்டைலில் சொல்வதானால், மெக்கல்லம் வழி தனிவழி :-) 5 ஓவர்களில் நியூஜி 71 ஓட்டங்களை குவித்தது. அதில் மெக்கல்லம் எடுத்தது 59 (26 பந்துகள்). உலகத்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினை ஒரு கிளப் பந்து வீச்சாளர் போல மெக்கல்லம் குரூரமாக எதிர்கொண்டதில் , 5வது ஓவரில் மட்டும் 25 ஓட்டங்கள்!


என் டிவிட்டு ஒன்று:

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  9h 9 hours ago

Thats what you call stand and deliver. .... Brendon's sixer against the 1 and only Steyn #NZvsSA

அந்நாள் முக்குச்சிக்காரனும், இந்நாள் தாக்கடி மட்டையாளுமான மெக்கல்லம் வெறி கொண்ட வேங்கையாக இருந்த காலையில் (சரி மாலையில்), வெளிவிலகுச்சுழல் வீசும் தென்னாப்பிரிக்கா பந்தாள் இம்ரான் தஹீர் 6வது வீச்சலகை ஒரு வெற்றலகாக  வீசியது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும் (இந்த வரி மட்டும் கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய https://www.facebook.com/photo.php?fbid=863785130326644&set=a.278177815554048.60630.100000854949412&type=1 கட்டுரை தந்த உத்வேகத்தில் எழுதப்பட்டது)

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  9h 9 hours ago

Now SA can make a match of this contest as Mccullum has departed. Styne should be 1 relieved man #NZvsSA #worldcupcricket

மெக்கல்லம் 6வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் தான், ஆட்டம் ஒரு சமநிலைக்கு வந்தது என்று கூறலாம். அவர் இன்னும் ஒரு 10 ஓவர்கள் களத்தில் இருந்திருந்தால், இந்த ஆட்டத்தை ”நகம் கடிக்க” வைத்த ஒன்றாக நாம் எல்லாம் சோசியல் மீடியாவில் சிலாகித்திருக்க மாட்டோம் என்று உறுதியாக கூறுவேன்.  வில்லியம்ஸும், குப்தில்லும், சோபிக்கவில்லை. டெய்லரும், எலியட்டும் கவனமாக, சற்று நிதானமாக ஆடினாலும், முதல் 5-ஓவர் மெக்கல்ல அதிரடியால், 22 ஓவர்கள் வரை (டெய்லர் விக்கெட்டிழப்பு) தேவையான ரன்ரேட் 7-ஐத் தாண்டவில்லை. நியூஜி 151/4.  முக்கியமான தருணங்களில் தாக்குதலில் இறங்காமல், மெத்தனமாக, ஒரு சுகம் தரும் வட்டத்தில் (comfort zone) தென்னாபிரிக்கா இயங்குவது கூட அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனலாம். One must attack when the opponent seems to be a bit down.

நீயூஜி பாதிக்கிணறு தாண்டிய நிலையில் ஆண்டர்சன் களமிறங்கினார். இந்த இடத்தில், ஆண்டர்சனையும், எலியட்டையும் பாராட்ட வேண்டும், அழுத்தம் எதுவும் காட்டாமல், அமைதியாக ஓட்டங்களை எடுத்தனர். 32வது ஓவரில், தெ,ஆ-வின் தலைசிறந்த ஃபீல்டர் டிவிலியர்ஸ் ஒரு எளிமையான ரன் அவுட் வாய்ப்பை நழுவ விட்டார். நம்பவே முடியாத தருணம் அது. அது அழுத்ததினால் நிகழ்ந்ததாகத் தான் அப்போது தோன்றியது.

என் டிவிட்டுகள்:

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU 

The very Devil took over DeVilliers in that moment of choking madness. He had time to pull a stump out after the crucial miss #NZvSA

anbudan BALA|எஅ.பாலா retweeted
prempanicker @prempanicker  

The batsman wasn’t in the frame, AB!! You could have gathered, bounced the ball a couple of times and still had time!!


anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU 

.@ksnagarajan Choking just seen in brilliant DeVilliers missing the simplest of runouts #NZvSA #worldcupcricket

32வது ஓவர் முடிவில் ரன்ரேட் 8-ஐத் தாண்டினாலும், 6 விக்கெட்டுகள் கையிருப்பில் (11 ஓவர்களில் 90 ரன்கள் தேவை), நியூஜி கை சற்றே ஓங்கி இருந்ததாகத் தான் தோன்றியது. நடுவில் டிவிலியர்ஸ் ஒரு 8 ரன் ஓவர் வீசினார். மார்க்கல் வீசிய 38வது ஓவர் ஒரு மிக அற்புதமான ஓவர். ஒரு ரன் தான் கொடுத்தார். ஆண்டர்சன் விக்கெட்டை வீழ்த்தினார். மிக அதிக உயரம் சென்ற பந்து விழும் இடத்தை அருமையாக மதிப்பிட்டு காட்ச் பிடித்த டிபிளஸ்ஸியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓவர் முடிவில், ரன்ரேட் முதல் முறையாக 9-ஐத் தாண்டியது.

என் டிவீட்டுகள்:

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

60:40 in SA favour now #NZvSA

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

29 from 18. When most #ipl teams can win from here, why cant the Black Caps :-) #NZvSA

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

I am not supporting anyone here. Destiny will take its course in thrillers. Ony upto a point effort works. #NZvSA #worldcupcricket

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

This is LIVE WIRE #NZvSA

41வது ஓவரில், ரோன்ச்சி அவுட். தனது 5 உலகக்கோப்பையில் பங்கு கொள்ளும் 36-வயது டேனியல் வெட்டோரி களமிறங்கினார்.  மீண்டும் ஒரு ரன் அவுட் சொதப்பல், எலியட்டுக்கு ”உயிர்” கிடைத்தது. ஓவர் முடிவில், தேவையான ரன்ரேட் 11.50.  42வது மார்க்கல் ஓவரில், பெஹர்தீனும், டூமினியும் மோதிக்கொண்டதில் காட்ச் வாய்ப்பு பறிபோய் எலியட்டுக்கு மீண்டும் ஒரு “உயிர்” கிடைத்தது!  இவற்றை வைத்து, தென்னாபிரிக்க அணியை Chokers என்றழைப்பது சற்றே அதீதம் என்பேன். துரதிட்டமிக்க ஒரு அணியாகத் தான் தென்னாபிரிக்காவை நான் பார்க்கிறேன். இறுதி ஸ்டெயின் (43வது) ஓவரில் 12 ரன்கள் தேவையான சூழலில், 5வது பந்தில் எலியட் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து, மீதம் வரலாறு ஆனது. 2015 உலகக்கோப்பை போட்டியின் சிறந்த அணியாக பலரும் கருதும் நியூஜிலாந்து முதன்முறையாக உலகக்கோப்பை ஒரு நாள் போட்டி இறுதிச்சுற்றில் நுழைந்தது.


நியூஜியின் மகத்தான வெற்றிக்குப் பின் நான் இட்ட சில டிவீட்டுகள்:


anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

One feels so sorry for SA. Such a talented bunch of cricketers, tend to falter near the last mile #NZvSA

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ #NZvSA

 anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

.@priyakathiravan Steyn for all his proven skills & greatness delivered much less in crunch situations. He doesn't inspire confidence #facts

 anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

Though I acted neutral today, I was secretly wishing for a famous SA win as in some ways SA cricket reflects my life #NZvSA #worldcupcricket

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  5h 5 hours ago

When Morne was shedding tears, I really felt depressed. #NZvSA That lanky kid bowled his heart out today and that was not enough


முகத்தில் வலியைத் தேக்கிய டிவிலியர்ஸின் இப்புகைப்படம், தென்னாபிரிக்காவினரின் சோகத்தின் வெளிப்பாடாகவும்,

ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் இந்த டிவிட்டர் குறிப்பு, நியூஜிலாந்து நாட்டினரின் பெருமகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் காண முடிகிறது. 

Stephen Fleming, the Back Caps' former captain, was ecstatic.

“What an unbelievable game. So proud of the Back Caps and what they have achieved. Also feel the raw pain of South Africa on an amazing day,” read his post on the social networking site.

இறுதியாக ஒரு விஷயம்: நாளை நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அரைஇறுதியில் இந்தியா டாஸில் வென்றால், சிட்னி ஆடுகளத்தை நோக்குகையில்,  ஃபீல்டிங் செய்வது உத்தமம் என்று படுகிறது. ஏனெனில், முதலில் ஆடி, 300+ ரன்கள் அடித்தால் கூட அது போதுமா என்று தெரியவில்லை.

---எ.அ.பாலா

Friday, November 28, 2014

Phillip Hughes - அசாதாரணத் திறமை -- அஞ்சலி


Phillip Hughes - அசாதாரணத் திறமை -- அஞ்சலி

ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பலப்பல ஆண்டுகள் தொடக்க ஆட்டக்காரராக பரிமளித்திருக்க வேண்டிய பிலிப் அகாலமாக, ஒரு அசாதாரணமான நிகழ்வில் மரணம் அடைந்தது மிகவும் வருந்தத்தக்கது. ஒரு விவசாயின் மகனாகப் பிறந்து, தனது குடும்பத்தின் வாழைத்தோட்டத்தில் கிரிக்கெட் ஆடத் தொடங்கி, தனது அசாத்தியத் திறமையினால், 20 வயதிலேயே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கியவர், ஸ்டெயின், மார்க்கல், சோத்சோபே, நிதினி ஆகியோர் அடங்கிய தென்னாப்பிரிக்காவின் சூப்பர் வேகப் பந்துவீச்சை திறம்பட ஆடி, தனது முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 75 ஓட்டங்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவின் மகத்தான வெற்றிக்கு வழி வகுத்தவர்.

2வது டெஸ்ட்டில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டர்பன் ஆடுகளத்தில், 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, உலக சாதனை நிகழ்த்தியவர். இதன் மூலம் ஜார்ஜ் ஹெட்லியின் 79 ஆண்டு சாதனை வீழ்ந்தது. சற்று நிதானமாக ஆடுபவர் என்ற முத்திரையை உடைத்து, வெலிங்டன் டெஸ்ட் ஒன்றில், 75 பந்துகளில் 86 ரன்களை விளாசி, ஒரு முக்கியமான வெற்றிக்கு காரணமானவர். அதற்கு நேர் மாறாக, 2011 கொழும்பில், இலங்கைக்கு எதிராக மட்டை போட்டு, சதமடித்து, டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெல்ல வித்திட்டவர். ஒரு நாள் போட்டிகளிலும் 2 சதங்கள் அடித்துள்ளார். கிராமப்புறத்துக்கு உரித்தான தன்னடக்கமும், அமைதியும், தன்னம்பிக்கையும் மிக்க இளைஞரும் கூட.

இன்னும் எவ்வளவோ சாதித்திருக்க வேண்டிய, "Never say die" என்ற ஆஸ்திரேலிய சித்தாந்தத்திற்கு எடுத்துக்காட்டாக கிரிக்கெட் ஆடிய, ஒரு இளைஞர் 26 வயது நிரம்புவதற்குள் மரித்து விட்டார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

-- எ.அ.பாலா

Saturday, November 22, 2014

ரோஹித் சர்மா 264 - அசாதாரணத் திறமை

 30 நவம்பர் 2014 கல்கி வார இதழில் வெளிவந்த எனது கட்டுரை:

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் சர்மா எடுத்துள்ள 264 ரன்கள் அபார சாதனை.  ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தபோதிலும், இலங்கை அணியின் பந்து வீச்சும், தடுப்பும் மோசமாக இருந்தும், 173 பந்துகளில் அவர் எடுத்த 264 ஒரு ஸ்பெஷல் இன்னிங்க்ஸ்.

 விரல் எலும்பு முறிவு காரணமாக முதல் 3 போட்டிகளில் ஆடாமல், 4வது போட்டியில் களமிறங்கியபோது, ரோஹித் தொடக்கத்தில் நிதானமாகவே ஆடினார், அதாவது முதல் சதமெடுக்க 100 பந்துகள் ஆனது. அதன் பின் தான் பிரம்மாண்ட விளாசல்!

ரோஹித் எதிர்கொண்ட அடுத்த 73 பந்துகளில் அவர் 164 ரன்கள் குவித்தார்! ஸ்டிரைக் ரேட் 225%. அந்த 164 ரன்களில் 21 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் (132 ரன்கள்) அடங்கும். அதோடு, அதிரடி ஆட்டத்தில் திறமை மிக்க விராத் கோலியுடனான 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில், ரோஹித் எடுத்தது 132 ரன்கள், கோலி எடுத்தது அதில் சரிபாதி 66 தான். இதிலிருந்தே அது ஓர் அசாதாரணமான, அபாரமான, அரிதான ஒரு நாள் இன்னிங்க்ஸ் என்பது விளங்கும்.

பிப் 2006-ல், தனது 19வது வயதில், ரோஹித் தனது சீனியர் கிரிக்கெட் பயணத்தை, மேற்கு மண்டல அணியின் சார்பில் தியோதர் போட்டி ஆட்டமொன்றில், தொடங்கியபோதே, அபரிமிதமான திறமை கொண்டவராக பலராலும் சிலாகிக்கப்பட்டவர். அதே ஆட்டம் தான் செத்தேஷ்வர் புஜாராவுக்கும் ரவிந்திர ஜடேஜாவுக்கும் கூட முதல் ஆட்டம் என்பது கூடுதல் தகவல். ரோஹித்தும் ஜடேஜாவும் மேற்கு மண்டல வெற்றிக்கு வழிவகுத்தனர்.

அடுத்த ஆண்டிலேயே, இந்திய ஒரு நாள் போட்டிக்கான கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்து விட்டாலும், அத்தனை திறமை இருந்தும், சர்வதேச அளவில் ரோஹித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள 6 ஆண்டுகள் ஆனது. இடையே, T-20 உலகக்கோப்பையை (2007) இந்தியா வெல்ல, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக ஆடினார். 2011-ல் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஹித் இடம் பெறவில்லை.

அசாத்திய திறமைக்குத் தக்கவாறு பரிமளிக்க இயலாத, சற்றே அயற்சியான, அந்த காலகட்டத்தில், ஐபிஎல் T-20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் குறிப்பிடத்தக்க சிலபல இன்னிங்ஸ்களை ரோஹித் ஆடியிருக்கிறார்.  அவரது தலைமையில் 2013-ல் மும்பை அணி ஐபிஎல் T-20 கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

அவரது ஆதிரடி ஆட்டம் கூட, பேட்டிங் இலக்கணத்திலிருந்து அதிகம் விலகாமல், விவிஎஸ்.லஷ்மண் ஆட்டத்திற்கு இணையான, கண்ணுக்கு விருந்தாக அமையும் தன்மை கொண்டதாகவே தொடர்ந்தது. அசுர பலத்தை விடவும், கிரிக்கெட் ஆட்டத்திற்கு மிக முக்கியமான டைமிங் என்ற சங்கதியும், மைதானத்தில் இடைவெளிகளில் பந்தைச் செலுத்தும் லாவகமும், பந்தை எதிர்கொள்ள அவருக்குக் கிட்டும் ஒரு அரை வினாடி அதிக நேரமும் ரோஹித்துக்கு இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவை. ஆடுகளத்தைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் நேர்த்தியாக ஷாட்கள் ஆடக்கூடிய திறனும் ரோஹித்துக்கு பெரிய பலம். அதோடு, ரெய்னா, ஜடேஜாவுக்கு இணையான சிறந்த பந்து தடுப்பாளரும் கூட.

டெஸ்ட் போட்டியில் அசாருதீனுக்கு மாற்றாக விவிஎஸ்.லஷ்மண் பரிமளித்தது போல, விவிஎஸ்ஸின் இடத்திற்கு மாற்றுத் தேர்வாகவே ரோஹித் கருதப்பட்டார். ஆனால், அவருக்கு முன்னமே, ரெய்னா, புஜாரா, விராத் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் நுழைந்து விட்டனர். ஒரு வழியாக, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நவம்பர் 2013 டெஸ்ட் தொடரில் களமிறங்கி, தனது முதல் மற்றும் அடுத்த ஆட்டங்களில் தொடர் சதங்கள் அடித்தும், பின் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்களில் ரோஹித் சறுக்கலைச் சந்தித்தார்.

ஜனவரி 2013-ல், ஒரு நாள் போட்டிகளில், துவக்க ஆட்டக்காரராக ரோஹித் ஆட ஆரம்பித்த பின் தான் அவரது  திறமையின் முழு வீச்சைக் காணும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டது.

2013 ஜனவரியிலிருந்து, சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்து ஓர் உலக சாதனையை நிகழ்த்திய போட்டி வரை, ரோஹித் ஆடிய 38 போட்டிகளில், 3 சதங்கள், 11 அரைச்சதங்கள் என்று ரன்களை (சராசரி 53) குவித்ததைப் பார்க்கையில் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில், இந்தியா கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது!

மேலே குறிப்பிட்ட ரோஹித்தின் 3 சதங்களில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்களூரில் அடித்த மற்றொரு இரட்டைச்சதமும் (209) உண்டு. ஆக, ஒரு நாள் (50 ஓவர்) சர்வதேசப் போட்டிகளில், 2 இரட்டைச்சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் ரோஹித்துக்குச் சேர்கிறது.  இருப்பினும் இன்றைய T-20 உலகத்தில் இச்சாதனையை மிஞ்சுவது கடினம் என்று கூற இயலவில்லை! ஒரு நாள் போட்டியில் ஒருவர் 300 ரன்கள் எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவேத் தோன்றுகிறது.  அதுவரை ரோஹித் தான் சூப்பர் ஹீரோ.

”அன்புடன்”
பாலா

நன்றி: கல்கி

Saturday, November 08, 2014

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் உலகநாயகன் ஆவாரா?

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் உலகநாயகன் ஆவாரா? -எ.அ.பாலா



செஸ் ஆனந்த் குறித்து நான் முன்னர் எழுதிய இடுகைகள்:

http://idlyvadai.blogspot.in/2012/06/blog-post.html
http://idlyvadai.blogspot.in/2013/11/blog-post_17.html
http://balaji_ammu.blogspot.in/2013/11/deccan-chronicle.html

2007லிருந்து தொடர்ச்சியாக 6 ஆண்டுகள், (5 முறை) உலக செஸ் சேம்பியனாக வலம் வந்த ஆனந்த், சென்ற வருடம் சென்னையில் நடந்த உலக சேம்பியன்ஷிப் ஆட்டத்தில் இளம் செஸ் ஜாம்பவான் கார்ல்சனிடம் தோல்வியடைந்தபோது, பலரும் அவரது செஸ் வாழ்க்கைக்கு இறப்பறிக்கை எழுதி விட்டனர். அதற்குக் காரணம், 43 வயது ஆனந்தின் மனத்தளர்ச்சியும், முடிவாட்ட திறமைக்குறைவும் கார்ல்சனுக்கு எதிரான சில ஆட்டங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனந்த் ரிடையர்மெண்ட்டை அறிவித்து விடுவார் என்று தான் நானும் நினைத்தேன்.

ஆனால், உண்மையான சேம்பியன்கள் தடாலடியாக முடிவெடுப்பதில்லை! சில மாதங்கள் ஓய்வுக்குப் பின், மார்ச் 2014ல் ரஷ்யாவில் நடைபெற்ற (கார்ல்சனுக்கு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும்) Candidates போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தார். உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் (கிராம்னிக், டோபலோவ், ஆரோனியன், ஆண்ட்ரிகின், மமெதயரோவ், கர்ஜாகின், பீட்டர் ஸ்விட்லர்) பங்கு கொண்ட அந்த மிகக்கடினமான 14 சுற்றுகள் கொண்ட போட்டியில், மிகத் திறமையாக, புது உத்வேகத்துடன் விளையாடி, இறுதிச்சுற்றுக்கு முன்பாகவே, டோர்னமண்ட்டை வென்று, மீளொரு முறை 2014 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்ள தகுதி பெற்றார். நிச்சயமாக யாருமே எதிர்பார்க்காத விஷயமிது! ஆனந்தின் செஸ் மீதான காதல் அத்தகையது.

Candidates tournament பற்றி வாசிக்க:
http://www.thechessdrum.net/blog/2014/03/31/world-candidates-2014-14-anand-wins-naysayers-silenced/

உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டி இன்று (8 நவம்பர் 2014, மாலை 5.30) தொடங்குகிறது. எப்போதும் போல 12 கிளாசிக்கல் செஸ் ஆட்டங்கள் வாயிலாக, சேம்பியன் நிர்ணயிக்கப்படுவார். அதாவது, யார் முதலில் 6.5 புள்ளிகளைத் தொடுகிறாரோ அவரே சேம்பியன். 6-6 என்று நிலையில், 4 துரிதவகை செஸ் ஆட்டங்கள் நடைபெறும். இப்போட்டியிலும், ஆனந்த் under dog-ஆகத் தான் கருதப்படுகிறார் என்றாலும், அது அவருக்கு நல்லதே. சென்ற முறை அவர் சேம்பியனாக இருந்ததும், போட்டி சென்னையில் நடைபெற்றதும், அவருக்கு சற்று மன அழுத்தத்தை ஏற்படுத்தி பாதகமாகவே அமைந்தன. இம்முறை ஆனந்த் தனது இயற்கையான, சற்றே அதிரடியான ஆட்டத்தை (2013 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியின் 9வது ஆட்டம் போல) கைக்கொள்ளலாம்! அது பலன் தரும் என்பது என் எண்ணம். தற்காப்பு வகை ஆட்டம், ஒரு கால்பந்து ஆட்டக்காரருக்கு நிகரான கார்ல்சனிடம் பலனளிக்காது!

விஷி ஆனந்த் இன்று எழுதியிருப்பதை வாசிக்க: It is time to get into match mode!
http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=It-is-time-to-get-into-match-mode-08112014017005

மேலும், கார்ல்சன் இவ்வருடம் நடைபெற்ற சில போட்டிகளில் சோபிக்கவில்லை. அதனால், முதல் 6 ஆட்டங்களில் சமநிலை இருப்பின், அவருக்கும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. செஸ் ஆட்டக்காரர்கள் பலர், ஆனந்த் இம்முறை நல்ல மனநிலையிலும், முன்னேற்பாடுடனும் இருக்கிறார் என்று கருதினாலும், தனது 44 வயதில், கார்ல்சனை வென்று ஆனந்த் மீண்டும் உலக சேம்பியன் ஆவது எளிதன்று. முக்கியமாக, முடிவாட்ட நிலை (End Game position) என்பது எளிமைப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் இருக்குமாறும், நீண்ட ஆட்டங்கள் தரும் சோர்வினால் ஆட்டத்தில் தவறுகள் (Blunders) ஏற்படாமலும் ஆனந்த் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

---எ,அ,பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails